Thursday, September 30, 2010

கவிழ்தும்பை

எவ்வளவு நேரம்தான் என்னையே
பார்த்துக்கொண்டிருப்பாய்
என்றது வெட்கத்தில்
தலை கவிழ்ந்த
ஒற்றைத்
தும்பைப்பூ

சின்னஞ்சிறிய அளவில்
எதிரெதிர்
அடுக்கிய இலைகள் தாண்டி
வெண்மையாய் பிரகாசிக்க
என்ன தவம் செய்தையோ நீ

உன்னை மார்பில் ஏந்தி
வெற்றி வேண்டி
சமாதானம் பேச
வருவாயோ என் கண்ணே
உலகோடு எனக்கில்லை சமர்
என்று கொஞ்ச

யுத்த மரபின் கனம் விலக
ஓற்றைத்தும்பை
பல்கிப் பெருகி
மார்பனைத்தும் மாலையாய்
நிறைக்க
கொஞ்சலின் உந்தல்
அதி வேகமாக
திகட்டத்திகட்டக்
கொஞ்ச
நிலவெளியெங்கும்
நிறைத்தது
பூக்களாலான
வெண்கடல்

Wednesday, September 29, 2010

என் கோப்பைக்குள் உன் மதுவை ஊற்றாதே

என் கோப்பைக்கும் மதுவுக்கும்
தனிமைக்கும் இசைக்கும்
சில கணக்குகள்
சில பவித்திரங்கள் உண்டு

பெரும்பாலும் இவை
இணையும் புள்ளி
இழை தப்பினால்
முழுப் பித்து
இல்லையெங்கில்
களி வெறி என்றிருக்கும்

ஒரு துளி மது
ஒரு மாத்திரை இசை
ஒரு நொடி தனிமை
என இணைத்து
இணைத்து
கணம் கணமாய்
தொகுத்திருக்கிறேன்
உன் நினைவுகளை

மேலும்
என் கோப்பைக்குள்
உன் மதுவை ஊற்றாதே
தயவுசெய்து

நீத்தல் விண்ணப்பம்

எனை அழிக்க
பெரிய ஆயுதங்கள் வேண்டாம் உங்களுக்கு

அகலாத் துயரத்தை அடிவயிற்றில்
அடக்கி சுமந்து திரிகிறேன்
பல்லாண்டு பல்லாண்டாய்
அவ்விடத்தே
சிறு சிறு
நகக்கீறல்களை பதிக்கலாமென
நீங்கள் நினைக்க யத்தனித்தாலே போதும்
துகள் துகளாய் சிதறிவிடுவேன்
அடையாளமற்று

இருட் குகையில்
தனித்திருந்து
ஒளி கூசும்
உடல் மனம் பெற்றேன்
உங்கள் கண் சிமிட்டலின்
சிறு கீற்று போதும்
மீண்டும் இருளில் எனைப் புதைக்க

என்றாலும் என் நீத்தல்
விண்ணப்பம்
இதுவாகக்கடவது

பல்லாயிரங்கோடி முறை
பல்லாயிரங்கோடி ஆயுதங்கள்
எனை அழித்தாலும்

பெரு வெளியின்
சிறு மூலையில்
குறுஞ் சுடராய்
ஒளிர்ந்து ஒளிர்ந்து
ஓளியியல்பாய்
பிரபஞ்சம்
சுற்றி வருவேன்
முடிவற்று

Tuesday, September 28, 2010

விவரணை

உன்
சிறு மூக்கும்
இல்லி கண்களும்
மெல்லிதழும்
சிறு
தூரிகை
தீற்றல்களில்
கீழ் சுழலும் புயலென
உரு
பெற
முழுச்சித்திரம்
முடிக்காமலே
மூழ்குகிறேன்
நான்
உன்னுள்

பரிந்துரைகள் சில

அக வானில் பறக்க ஏதுவாய்
சிறகுகள் கட்ட
பரிந்துரைகள் சில
உண்டும்
என்னிடம்

தாராளமாய் அவற்றை
நானுனக்குத் தருவேன்
நீ
விரும்பா முத்தங்களென

அவமானங்கள் மீறி
காதலில் எப்போதும்
நெகிழ்ந்திருத்தல்
முதல் சிறகு

புல், புழு, பூச்சியென
ஜீவராசி அனைத்துடனும்
பேதமற்று பேசுதல்
இரண்டாம் சிறகு

பறக்கையில் விழ நேர்ந்தால்
சுற்றும் முற்றும் பார்
அருகாமையில்தான்
நான் கிடப்பேன்
கீழே

தத்ரூபம்

போர்க்களத்தின் மாதிரியை நிர்மாணித்துக்கொண்டிருந்தார்கள்
அரங்குகள் அமைத்து, அரங்குகள் அமைத்து
பாரம்பரியம் பெற்றுவிட்ட மக்கள்

பெரும் செலவில் சிறு காலத்தில் அழியும்
அரங்குகளில்
போர்க்கள மாதிரி
விசேடம் என்றார் விடயம் அறிந்தவர்

அரசியல் கூட்டம் சென்று திரும்பி
சாகும் மாதிரிகள் ஆக கூட்டம் மோதியது
ஆணென்றும் பெண்ணென்றும் குழந்தைகளென்றும்
அலைக்கழிப்பையும் மீறி

ஏழ்மை போததென்று உடல்களில்
சாக்கடை கொட்டினர்
வாளி வாளியாய்

குரூரம் போதாதென்று சிவப்பு
சாயம் பீச்சினர்
லாரி லாரியாய்

சிதிலம் போதாதென்று நாறும்
குப்பை குவித்தனர்
கிரேன் கிரேனாய்

அரங்க மாதிரிகள் பல
கண்ட பெரியோர்
தத்ரூபம் போதாதென
முகம் திருப்பிச் சென்றனர்
அலட்சியமாய்

நிர்வாணமாய்

எதிரெதிர் நிலைக்கண்ணாடிகளை நிறுத்தி
நடுவில் நிர்வாணமாய் நின்று
என் எல்லையற்ற பிம்பப் பெருக்கை
பரிசோதிக்கையில்
நிராகரிப்பின்
சிறு மந்திரச் சொல் உதிர்த்து
கண்ணாடிகளை சுக்காய் உடைத்தாய்
ஐயோவென கதறி
தூசியில் கலந்தன
என் பிம்பத் துணுக்குகள்
சேமித்துப் பிடிக்க
ஒரு கைப்பிடி
லிங்கமாயிற்று
இன்னொரு கைப்பிடி
மூளையாயிற்று
கைக்ககப்படாமல்
போன அவயங்களில்
இருதயமும் ஒன்றா எனத் தெரியாமல்
மீண்டும் நின்றேன்
நிர்வாணமாய்

Saturday, September 25, 2010

கீழைத்தேயத்தைத் தேடியது

அவர்களெல்லோருமே ஒரே இடத்தையே
வந்தடைந்திருந்தார்களென்றாலும்

தான் வந்தடைந்த வழியே பெரு வழியென
தான் வந்தடைந்த வழியே தியாகங்கள் நிரம்பியதென
கலாபூர்வமானதென
பல்லி முட்டையேயென
மற்றவர்களின் வழிகளை உளவு பார்த்தபடியே
சூளுரைத்தார்கள்

உன்னுடையது சமூகவியலில்லையே என்றானொருவன்
உன்னுடையதில் கலையில்லையே என்றான் மற்றொருவன்
உன்னுடையதில் தத்துமில்லையே என்றான் மூன்றாமவன்
களம் சார் அரசியலெங்கே என்கிறான் நான்காமவன்

ஐரோப்பா, அமெரிக்கா என்றில்லை
ஆப்பிரிக்காவும் சுற்றி வந்தார்கள் அவர்கள்

அவர்கள் தேடிய
குறத்தி போலி நரிக்கொம்பு விற்க
ஆதிவாசி பிளாஸ்டிக் பறவையலகால் தலையை அலங்கரிக்க
காட்டுவாசி குடி நீருக்கு சாக

தேசிய வழி என்று முரசுகொட்டினான் ஒருவன்
வட்டார வரலாறு என்றும் அவனே மீண்டும் கொட்டினான்
சாதி இன உணர்வு கொண்டாடினான் மற்றொருவன்
குட்டையைக் குழப்பி புகழ் பெற்றான் அரைவேக்காடு

பல்லிகள் காலங்காலமாய் முட்டைகளிட்டுக்கொண்டேதானிருக்கின்றன

மீண்டும்

தனக்குள்ளேயேபேசிக்கொண்டதாவது

தமிழ் சினிமாப் பாடல்கள் ஏற்படுத்தும்
கிறுகிறுப்பு கவிதை எழுதுவதற்கு பெரிய சவால்.
என்ன செய்ய?

மொத்த சமூகமும் சொக்கிக்கிடக்கிறதே
குழந்தைகளும் விடலைகளுமென்றால் கேட்கவே வேண்டாம்
சன்னதம் பற்றி கூந்தல் விரித்து ஆடாத குறை
என்னதான் செய்ய?

பாடல்களினால் மனம் திரவமாகி
தளும்பிவிடுகிறது; ஆத்தாடி காத்தாடி என்பது போன்ற
எளிமையான சந்தங்களுக்குகூட
இளம் பெண்களின் குரல்கள்தான் என்றில்லை
எல்லா குரல்களுமே தமிழில் பாடும்போது
மனத்தை பறிகொடுக்கத்தான் வேண்டியிருக்கிறது
என்னதான் மக்கா செய்ய?

ஆத்மாவைக் கரைத்து உங்கள் கண்களுக்கு அஞ்சன மை தீட்டுகிறேன்
பாடலாசிரியர்களே, பாடகர்களே, இசையமப்பாளர்களே
(இப்போது புதியதாய் சேர்த்துக்கொள்ள வேண்டியது)
இசை விமர்சகர்களே
என் சகல வெளிகளையும் ஆக்கிரமித்து
என்னைத் தொடர்ந்து கிளர்ச்சியூட்டாதீர்கள்

நான் எனக்கான கவிதைகளை எழுதக்கிளம்பியிருக்கிறேன்.

Friday, September 24, 2010

தனக்குள்ளேயேபேசிக்கொண்டதாவது

ஆழ்மன அமைதியிலிருந்து உரைநடை, கவிதை என்ற செயற்கை வேறுபாடுகளற்று இயல்பாக கவிதை வெளிப்படவேண்டும். அதிர்ச்சி ஏற்படுத்துதல், அதீத உணர்ச்சியின் வெளிப்பாடு, அலங்காரம் ஆகியன தவிர்த்தல் நல்லது. பழந்தமிழ் பாண்டித்தியம், நீண்ட கால தத்துவப் பயிற்சி கவிதைகளில் வெளிப்படாமல் இருப்பது அவசியம்.

நட்பான அந்தரங்க சுத்தியுடன் கூடிய, உரையாடல்தன்மை கொண்ட குரலை வளர்த்தெடுக்கவேண்டும்; எல்லோரையும் எல்லோரும் எந்த சமயத்திலும் கைவிட்டுவிடுவார்கள் என்றாலும்கூட.

பொதுவாக inferior forms என்று கருதப்படக்கூடிய allegory, cliché பிரகடனங்கள் போன்றவற்றில் கவிதையை வெளிப்படுத்தத் தயங்கக்கூடாது.

நமது காலத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலக்கியச் செயல்பாடுகளுக்கு நேர் எதிரானதாக நம் கவிதை இருக்க வேண்டும்; எல்லோரும் அதிகம் எழுதுகிறார்கள் என்றால் குறைவாக எழுதினால் போதுமானது. நோக்கமற்று இருத்தல் இவ்வகையில் அதிக சுதந்திரத்தைத் தரும். எதையும் நிறைவு செய்யாமல், சிதறலாகவே வைத்திருத்தல் நல்ல உத்தி. அந்தரங்கமான சுய அனுபவங்களை எழுதும்போது தூர நின்று கவனிக்கும் பார்வை வேண்டும். என்னுடையதில்லையே, எனக்குத் தெரியாதே என்பதெல்லாம் நல்ல கவிதா பாவங்கள்.

குழந்தைகள் விளையாட்டில் காட்டும் தீவிரத்தை இலக்கிய ஆக்கத்தினுள் எளிதில் எல்லோரும் கண்டடையாவண்ணம் பொதிந்து வைத்திருத்தல் கவிதை எழுதுவதின் சுகானுபவம்.

அவ்வபோது இப்படி இலக்கணம் எழுதினாலும் அதை உதாசீனப்படுத்திவிட்டும் கவிதை எழுதத்தெரிந்திருக்க வேண்டும்.

Tuesday, September 21, 2010

குடிபெயரல்

அவர்கள் கடைசியாய் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருந்தார்கள்; தந்தையும் மகனும் போல இருந்தார்கள். இளையவன் முதியவரிடம் எரிச்சலடைந்தவனாய் சலித்துக்கொண்டே வந்தான். முதியவர் பலஹீனராயிருந்தாலும் திட மனத்துடன் முன்னேறுவராயிருந்தார். இளையவனோ உடல் பலமுள்ளவன் போல தோன்றினாலும் கோழையாய் தள்ளாடி தள்ளாடி நடந்தான்.

சாலை முழுக்க முட்டளவுக்கு சகதியும் சாக்கடையும் அருவருக்கத்தக்க அவமானம்போல மண்டியிருந்தது. கால்களை இழுத்து இழுத்து பல மணி நேரம் நடந்தது யுகாந்திரம் யுகாந்திரமாய் நடப்பது போல தோன்றியது.

பெரியவர் இளையவனை தைரியம் சொல்லி, தேற்றி கூட்டிச்செல்பவராய் இருந்தார். இளையவன் குழந்தைபோல அழுதுகொண்டே பின் சென்றான்.

தூரத்தில் நகரம் பல்லாயிரக்கணக்கான மின்விளக்குகளோடு கண்கள் விழித்தே உறங்கும் மிருகமென கிடந்தது.

நகரத்தின் ஜன சமுத்திரத்தில் முகமற்று கரைந்துவிடலாமென்று பெரியவர் உற்சாகமாய் சொல்லும்போது ஊர்த் தண்ணீரின் சுவை நினவுக்கு வர குரல் கம்மி கரகரத்தது.

சகதியின் மத்தியில் அவர்கள் நின்று சற்றே திரும்பிப் பார்த்தபோது மூட்டை முடிச்சுகளுடன் மக்கள் வந்துகொண்டிருந்தார்கள்.

அவர்கள் வந்து கொண்டேயிருந்தார்கள்.

Monday, September 20, 2010

ஒத்து

அவ்வளவு சுலபமான கலையல்ல
ஒத்து ஊதுவது

குனிந்த தலை நிமிராமல்
அடக்கிய மூச்சு
ஒத்தின் வழி
மேலும் கீழும் சுழல
சரணாகதியின்
உடல் உயிர் இயக்க
பிம்பமாய்
கடைசி சித்திரமாய்
இருக்கக் கற்றிருப்பது
அடிப்படை

தம்புரா ஆர்மோனியம் போல
இன்னொரு சுதி
கருவியல்ல
ஒத்து

மூச்சே உயிர்
உயிரே மூச்சு
மூச்சே ஒத்து
என்றிருக்க வேண்டும்
நாதஸ்வரம் எப்படி
மேலே கீழே
சென்றாலும்

முழுச் சமூகமும்
ஒத்தே ஊதும்
தலை நிமிராதபோது

Sunday, September 19, 2010

படிமம்

முகப்படாம் களைந்தாயிற்று எனினும்
சிறிய சிவந்த கண்களில் சீற்றமும்
கண்ணீரும் வடிந்தபாடில்லை

ஆயிரம் வாழைகளை துவம்சம் செய்தாயிற்று எனினும்
கொல்லன் துருத்தியைப் போலியங்கும்
மூச்சு சீரானபாடில்லை

கதறி அழும் பெண்களின் ஓலமும்
சிதறி ஓடும் சேனைகளின் பேரழுகையும்
முறமென வீசும் காதுகளில் நின்றபாடில்லை

பெருவுடல் புழுதியில் புரள
பிளிரல் நாட்டையே நிறைக்க
துதிக்கை உலக்கையாய் விலுவிலுக்க
நான்கு கால்களையும் வான் நோக்கி உதறியாயிற்று எனினும்
அவலத்தின் காட்சிகள்
அகத்தில் அகலுவதாயில்லை

போரின் நினைவுகளில் பெகளம் கிளப்பும்
பெரு மிருகத்தின்
கோட்டுருவச்சித்திரம்
நம் கால
அகப் படிமம்
என்பதாகவே

அம்மை

அம்மைக்கு பருத்த முலைகள் ஏராளம்
கைகளோ பல்லாயிரம்கோடி
காம்பிற்கு ஒரு பால்
கைக்கொரு அபயம்

நீண்ட கழுத்தின் மேல்
கூம்பியிருந்த முகத்திற்கு
ஒற்றைக் கண்ணே
வாயிலாக
இக்காலம்
முக்காலம்
எக்காலமும்
ஆங்கே குவிவதாக

அம்மையை கனவு நதி தீரத்திலே
காணவியலும்
என்பதாக

ஆதிவாசி கதையில் வாழும் அம்மை
காலம் தப்பியேனும்
பேதமற்று அணைக்கும்
பேருவுவகையை
நகர் வழி ஏகி
நல்குவாளென

Thursday, September 16, 2010

வனச் சுனை

அடர்ந்த காட்டின் மத்தியில் உள்ள
அந்த வனச் சுனை
பற்றிய கதைகள் ஏராளம்.

ஸ்படிகக் கண்ணாடி போன்ற
அதன் மேற்பரப்பில் தன் முகம் பார்த்தவர்கள்
தன்னை அறிந்தவர்கள் ஆவார்களாம்

அதிலிருந்து நீர் அருந்தியவர்களோ
நினைத்தது சித்திக்கப் பெறுவராம்

அதில் குளித்தவர்களோ
மூவுலகையும் ஆள்வார்களாம்

வெறுமை என்றால் என்ன
என்று தெரிந்தவர்களுக்கு
அந்த வனமும் சுனையும்
எங்குமிருக்கிறதாம்

உணர் கொம்புகள்

தலையைக் கவிழ்த்து
சுவரோரக் கறைகளில் கண் பதித்திருந்தாள்

அவனோ உற்சாகமாய்த் தன் வேலையைப் பற்றி
கைகளை ஆட்டி
சிகரெட்டை புகைத்தவாறு
பலவாறாய்ப் பேசிக்கொண்டிருந்தான்

அவன் வார்த்தைகளில்
சுவர்க் கறைகள் வித வித
பிராணிகளாகிக்கொண்டிருந்தன
கம்பளிப்பூச்சிகளாய்
அட்டைகளாய்
நத்தைகளாய்
திரவம் பரப்பி
ஊர்ந்தன

அவற்றின் உணர் கொம்புகளை
அவிக்க
பெரிய தீவெட்டி ஒன்று
வேண்டுமென அவள்
வாய் விட்டு சொல்லி
தலை நிமிர்ந்தபோது

அவன் போய்விட்டிருந்தான்

Wednesday, September 15, 2010

ஆயா

ஆயாவின் பெயரை யாரும் கேட்டதில்லை
குடும்பம் உண்டா
விலாசம் என்ன
வயது என்ன
சொந்த ஊர் எது
தினசரி எங்கிருந்து வருகிறாள்
எங்கே போகிறாள்
நோயுண்டா நொடியுண்டா
எப்படி சளைக்காமல் வேலை செய்கிறாள்
யாரும் கேட்பதில்லை
சம்பளப்பணம் பேசியதோடு சரி

இந்த ஆயா இல்லாவிட்டால்
இன்னொரு ஆயா
பேச்சில்லாமல் வேலையைப் பார்த்தோமா போனோமா
என்றிருக்கவேண்டும்
அவ்வளவுதான்

என்றாலும்
ஆயாவின் அரவணைப்பை
ஒளியை அறிவது போல
நன்கு அறியும்
உங்கள் குழந்தைகள்

கிளி வளர்ப்பு

அதைக் கூண்டிலடைத்ததிலிருந்து
அவள் கணவனின் குரலில்
இறைஞ்சுகிறது

மிளகாய்ப்பழம் தர மறுத்தபோது
அவளுடைய காதலனின் குரலில்
அவ்வபோது
கூப்பிடுகிறது

சிறிய சிணுக்குரி ஒன்றினால்
பட்டென்று அதன் தலையில் போட்டபோது
அவள் அம்மாவெனவே முனகியது

எல்லோரும் கிளியாகிவிட்டனர் என்ற
பிரமையிலிருந்தவளுக்கு
கூண்டைத் திறந்துவிட்டால்
தன் சுய குரலில் அது பேசுமென
அவளுக்குத் தெரிந்துதானிருந்தது.

Tuesday, September 14, 2010

வருகை

காத்திருந்து காத்திருந்து
பல ஆண்டுகள் கழிந்தபின்
சுவாதீனமாய் வந்து சேர்ந்தாள் அவள்

கடிதங்களுக்கு பதிலெழுதாது பற்றி
எந்த விளக்கங்களும் இல்லை
காலம் தப்பிவிட்டது குறித்து
எந்த விசனமும் இல்லை
அலைக்கழிக்க விட்டது பற்றி
அறிந்தமாதிரியும் இல்லை
எல்லாமே எப்பொழுதுமே
ஒரே சீராய்
இருப்பதான பாவனையில்

மேஜை விரிப்பை சரி செய்தாள்
ஜன்னல் திரைச்சீலைகளை இழுத்து விட்டாள்
கழுவாத கோப்பைகளை
அடுக்களை அங்கணத்தில் போட்டு வந்தாள்

மேலே சுவரில் படமாய் தொங்கும்
அம்மாவின் படத்தைக் கவனிக்காமல்
கன்னத்தில் குழி விழும் சிரிப்போடு
தன் கைப்பையிலிருந்து எடுத்த
சிறு பரிசினை
‘இது உன் அம்மாவுக்காக’ என்று
நீட்டியபோது

பெருமழையும் அணைக்கவியலா
காட்டுத்தீயென எழுந்த
காமத்தை
ஒரு கை நீரினால்
சட்டென அவித்தாள்
தானறியாமல்

Monday, September 13, 2010

கொசுவம்

தடுப்புக்கு மேலிருந்த கண்ணாடி
வழி போவோர் வருவோரின்
இடுப்பு மட்டும் தெரிந்தது

சேலையின் கொசுவத்தை
செருகியிருந்த விதத்தில்
பளீரிட்ட மாநிற இடை
அவள்தான் அவள்தான்
என அறுதியிட
பதறி எழுந்து
ஓடிச் சென்று பார்த்தான்

கொசுவம் மட்டுமே அவளாயிருக்க
வேறொருத்தி நின்றிருக்க
தன் நினைவின் துல்லியம்
தப்பியதாய் மனம் கற்பிதங் கொள்ள

புனிதமும் தொலைந்தது என்பதாகவே

கூண்டில் ஏறுதல்

பெயர் சொல்லி உங்களை எந்த நேரமும் அழைக்கக்கூடும்
அழைக்காமலும் இருக்கக்கூடும்
அழைத்தபின் உங்களை கூண்டில் ஏற்றவும்கூடும்
ஏற்றாமலிருக்கவும்கூடும்
கூண்டில் ஏற்றியபின்
உங்கள் வசதியைக் கேட்காமல்
வாய்தா தேதி அறிவிக்கவும்கூடும்
தேதி அறிவிக்காமல் குற்றப்பத்திரிக்கை தரவும்கூடும்
குற்றப்பத்திரிக்கை தராமல் வருடங்களை இழுத்தடிக்கவும்கூடும்
விசாரணை நடந்தாலும் நடக்கும்
நடக்காமலும் போகலாம்

எது எப்படி ஆயினும்
நீதிபதி உங்கள் கண்களை சந்திக்க மாட்டார்

நீங்கள் ஜன நெரிசலில் சிக்கியபடி
காத்திருக்க வேண்டும்
தயார்நிலையில்

Sunday, September 12, 2010

மிச்சமிருக்கும் பியர் பாட்டில்கள்

மிச்சமிருக்கும் பியர் பாட்டில்களை
பழைய பேப்பர்காரனிடம் போட்டு
மீண்டும் ஒரு பியர் வாங்கலாமென்றான் நண்பன்
சாக்கில் கட்டி கடைக்குப் போனவன்
இரண்டு பாட்டிலே வாங்கலாமாக்கும்
என்றான் மூக்கை நிமிர்த்தியபடி
மீண்டும் இரண்டு மிச்சமாகுமே என்றேன் கவலையோடு
பத்திரமாய் பொத்தி வை
அவையே நம்
இன்றைய வரலாறு என்றான்
தரிசனங் கண்டவனாய்

பிம்பங்களைப் புணரும் சமகாலத்தியர்க்கு

பிம்பங்களை மனத்தால் புணர்ந்து
பழகிவிட்ட சமகாலத்தியர்க்கு சில வேண்டுகோள்கள்

ஆரத் தழுவி பல முத்தமிட்டு பல முத்தமிட்டு
உதடுகளைக் கவ்வி
ஆழமாய் பதிந்து
நாக்கினால் நா துழாவி இருக்கையில்
பிம்பத்தை ஒத்ததா இதுவென
ஓரக் கண்ணால் பார்க்காதீர்கள்


உடலசைவுகள், பாவனைகள்
வருடல்கள், இறுக்கங்கள்
தளர்வுகள், பெருமூச்சுக்கள்
ஏற்கனவே அறிமுகமாவென
சோதிக்காதீர்கள்

படுக்கையறைகளில் பிற பெயர்களைச்
சொல்லி கூவுதல் இப்போதெல்லாம்
சகஜமெனினும்
கூட்டம் கூட்டமாய்
ஆணுடல் பிம்பங்களும்
பெண்ணுடல் பிம்பங்களும்
உறவின் போதும்
காட்சிப் பெட்டிகளில்
ஆட வேண்டுமென
ஏங்காதீர்கள்

பிம்பங்களற்றும் நகரும் வாழ்வு

ஊஞ்சல்

கிராமத்தில் ஆடிய ஊஞ்சலை
நகரத்திற்கு கொண்டுவர முடிவதில்லை
எமக்கனம் கனக்கிறது என்கிறார்கள்
தலை வாசலில் நுழைவதில்லையென அலுக்கிறார்கள்
மர உத்திரமில்லா வீடுகளில் கூரையைப் பிய்த்துவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள்
அறுத்து விறகாக்கலாம் வீணையுமாக்கலாம்
பழம்பொருள் அங்காடியில் கூவிக்கூவி விற்கலாம்
மரவிலைக்குக் கொடுக்கலாம்
என்ன என்னவோ எது எதுவோ
செய்யலாமென்றிருக்கிறார்கள்
வீசி ஆடியபோது உச்ச முனைகளில்
உணர்ந்த பரவசத்தை
மறந்தவர்களாய்

Saturday, September 11, 2010

யார் யாரோ

யார் யாரோ எவெர் எவெரோ
அங்கெங்ஙின்னாதபடி
நண்பர்களுமாகின்றனர்
உற்றமும் சுற்றமுமாகின்றனர்
பகைவர்களுமாகின்றனர்
கணத்தின் விதிக்கேற்ப
கூடி அவிழும்
வண்ணக்கோலங்களென

யார் யாரோ
ஆளற்ற கரையிலும்
கடல் அமைதிகொள்ளாது
ஆர்ப்பரிக்கவே செய்யும் என்று
அறிந்தே வைத்திருக்கிறார்கள்

ஆதலினால்
கூடி முயங்க
எவர் எவரோ என்றாகிலும் சரி.

Friday, September 10, 2010

புனைவு அழிதல்

கூந்தல் வளர்த்து
பல முறை முகக் கண்ணாடி பார்த்து
பொட்டிட்டு
உதட்டு சாயம் பூசி
பலூன் முலை கட்டி
துணிப்பந்து திணித்து
பின்பாகம் கொழுக்க வைத்து
கால் சராய் கீழிரக்கி
கொப்பூழின் கீழ் பூனை மயிர் காட்டி
வலம் வரும் தேர் போல்
கை வீசி
கால் அகட்டி
கூட்டம் நிறைந்த
தெரு ஏகினாள் அவள்

அநாமதேய ஆண் கைகள் கசக்கியதால்
பலூன் முலையொன்று
வெடித்துச் சிதற
அவள் அவளல்ல
அவன் என்பதாகவே
கூட்டம் எக்களிக்க
ஓடும் ரயிலின் முன்
பாய்ந்தாள்
அவள்

Thursday, September 9, 2010

வெண் சங்கு

பிறந்த
கடலின் ஆரவாரத்தையும்
விகாசித்த
உலகின் மந்திர நாதத்தையும்
எப்பொழுதும் பகரும்
வெண் சங்கு ஒன்றை பரிசளித்தாள் அவள்
அவனோ
வெண் சங்கின்
செவ்விதழ்களின் நீர்மை
பெருங்கடலின் அழைப்பெனவோ
எல்லையின்மையின் மெளனத்தில் கரைய
அரிய வாய்ப்பெனவோ
அறியாதவனாகவே
வெண் சங்கு போற்றுதும் வெண் சங்கு தூற்றுதும்
வெண் சங்கு தூற்றுதும் வெண் சங்கு போற்றுதும்
என வாளாவிருந்தான்

பெண்மையின் பரிசுகள் அனைத்தும்
இவ்வாறாகவே

Wednesday, September 8, 2010

அ வாசக

அ ஆ வாசக
எவ்வளவு வம்பு தும்புதான் படிப்பாய் நீ
எவ்வளவு அரட்டைகள்தான் கேட்பாய் நீ
நகுலன் நகைக்க
குதிரைகள் கனைக்க
சொற்சிக்கனமாவது வேண்டி நில்.

நாய்களுக்கோர் நற்சான்றிதழ்

தெரியாமல்தான் கேட்கிறேன்
நீங்கள் விஸ்கியோடு தனியாய் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தபோது உங்களோடு துணையாய் இருந்தது யார்?
நீங்கள் வாலை ஒட்ட நறுக்கி எறிந்த பிறகும் உங்கள் காலையே சுற்றி வருவது யார்?
தினமும் நீங்கள் வீட்டுக்குத் திரும்பும்போது ஏதோ பல காலம் பிரிந்த தோழி போல உங்களைக் கொஞ்சி கூத்தாடுவது யார்?
தருமர் பின்னால் சென்றது போல உங்கள் பின்னால் வரப்போவது யார்?

இருந்தும்
நாய்களுக்கான நற்சான்றிதழ் கவிதை உலகம் பூராவும் இல்லவே இல்லையாம்

தெருவில் ஏதோ இசகு பிசகாய் காரியங்கள் செய்து உங்கள் வாழ்க்கையை உருவகப்படுத்தினால் அதற்காக இப்படியா?

Tuesday, September 7, 2010

இப்பொழுதெல்லாம்

விலைவாசி உயரும்போதெல்லாம் ஜோதிடர்களை நாடுவதுமில்லை
வீட்டுக்கு விருந்தினர் வந்தால் பயந்து ஓடிப்போய் கதவை சாத்திக்கொள்வதில்லை
தினசரிகளைப் படிக்கும்போது அதிகப் பதட்டம் அடைவதில்லை
நடு நிசியில் துர்க்கனவு கண்டு அலறி விழிப்பதில்லை
தமிழ் சினிமா பார்த்து மயங்கி விழுவதில்லை
ஈழச் செய்திகள் கேட்டு புத்தி பேதலிப்பதுமில்லை
பெரும் கும்பத்தினரின் வினைல் பேனர்களை தினசரி பார்த்து கதி கலங்குவதுமில்லை

நாங்கள் தைரியமாகவே இருக்கிறோம்

ஆற்றங்கரைத் தங்கல்

அவள் சிறு சிறு சுழிப்புகளுடன் அமைதியாகவே ஓடிக்கொண்டிருந்தாள். அவர்களோ நீண்ட பயணத்தினால் களைத்திருந்தார்கள். கரையில் தங்கலாம் என்று முடிவாயிற்று. வேறு எந்த இடமும் இருப்பதாகவும் தெரியவில்லை.

தங்கிய பிறகே அறிந்தார்கள் அவள் எந்த நேரமும் அவர்களை அணைத்து, ஒற்றி எடுத்துச் சென்றுவிடக் கூடியவளாம். தான் புரளும் வழிகளை மாற்றிக்கொண்டேயிருப்பாளாம். போன தடவை அவள் மலையிலிருந்து இறங்கியபோது பேராவேசத்துடன் தலைவிரி கோலமாய் பெரு மரங்களையும் சிறு கிராமங்களையும் தூக்கிப்போய் கடலில் போட்டுவிட்டு வந்தாளாம்.

அவளை எது சாந்தப்படுத்தும் என்று யாருக்குமே தெரியாதாம். அவளின் புன்முறுவைலைப் பார்த்து மயங்கிவிடக்கூடாதாம். அவளை ஆதி குடிகள் பேய்ச்சி என்றும் அழைப்பார்களாம்.

அவர்கள் தங்கள் குழந்தைகளை இறுகக் கட்டியணைத்துக் கொண்டு தூங்கத்தலைப்பட்டனர்.

அவர்களின் கனவுகள் பேரருவியில் தலைகுப்புற விழுவது, ஆழ்கடலில் தங்குவது, படுகையில் எலும்புக்கூடுகளாய் கூழாங்கற்களுடன் உருள்வது என்பதாயிருந்தன.

அவளோ அடுத்தது என்ன என்பதன் சமிக்ஞைகளற்று இயல்பாய் ஓடிக்கொண்டிருந்தாள்.

Monday, September 6, 2010

பக்கத்து இருக்கை கிழவர்கள்

பக்கத்து இருக்கை கிழவர்களை நேசிப்பது எப்படி?

இன்றா நேற்றா இருக்கைகளில் அமர்ந்திருக்கிறார்கள்? இளமையில் இடங்களைப் பிடித்தவர் சிலர். பல காலம் கிழவர்களாகவே அமர்ந்திருப்பவர் பலர். இளம் தோள்களில் ஏறத் தயங்காதவர்களும் பலர்.

உடல் கன்றி, ஒடிசலாய், முன் பற்கள் வெளித்தெரிய கருப்பு வெள்ளை புகைப்படங்களில் ‘யாரோ’ என்று குழுவோடு குழுவாக நின்றிருந்தவர்கள் அவர்கள்; இன்றைய தொந்திக்கும் தொப்பைக்கும் சம்பந்தமில்லாதவர்கள்.

விதிகளை நன்கு அறிந்து வைத்திருப்பார்கள், இஷ்டம் போல் வளைப்பார்கள், தங்கள் நலனுக்காக புதியதாய் செய்யவும் செய்வார்கள்.

தவறெதுவும் செய்யாமலேயே பொது இடங்களில் அடிபடும் இளைஞர்களை, தானும் ஒரு கை கொடுத்துத் தாக்கி வர, இருக்கை விட்டு சிறிதே விலகிப் போய் வருவார்கள்.

ஆனாலும்

இருக்கை பிடிக்க அவர்கள் பட்ட கஷ்டங்களை மெதுவாக எடுத்து சொல்லும்போது, அவர்கள் கண்களில் நீர் மல்குமானால், சிறு விசும்பல் கேட்குமானால், சரியென்றிருக்கலாம்.

இல்லையென்றால் அடுத்த இருக்கைக்கு சீக்கிரம் நகர்வதே மேல்.

Sunday, September 5, 2010

தெருவில் இறங்கி நடந்தவன்

தெருவில் இறங்கி நடந்தவனுக்கு தெரிந்திருக்கவில்லை தான் நடப்பது தெருவல்ல பந்தய மைதானம் என்பது; கீழே விழுந்து மீண்டும் எழுந்தபோதுதான் அவனுக்கு அது தெரியவந்தது. நடையல்ல ஓட்டமே தெருவின் எழுதப்படாத விதி என்பதும் பல பந்தயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்றும் அவன் அறிந்திருக்கவில்லை.

அவன் கீழே விழுந்திருந்தபோது பலர் எல்லைக்கோடுகளைத் தொட்டிருந்தார்கள்; பலர் கோப்பைகளை வென்றிருந்தார்கள்; பலர் வெற்றி வாகைகளை சூடியிருந்தார்கள்.

மைதானத்தின் விதிகளை வசப்படுத்தியவர்கள் விழுந்தது கணக்கல்ல என்று இறுதியாகக் கூறினார்கள். ஓடினாயா எல்லைக்கோட்டை தொட்டாயா என்பது மட்டுமே கணக்கு என்றார்கள். இது தெருதானே என்றவனை உன்னை விஞ்சிவிட்டோம் பார்த்தாயா என்று பதிலளித்தார்கள். நடக்கவே வக்கில்லை இவன் எங்கே ஓடுவான் விலாவில் ரெண்டு போடு என்றார்கள் சிலர். பரிதாபம் காட்டிய சிலர் புனிதர்கள் ஆனார்கள்.

மீண்டும் நடக்கத்தலைப்பட்டவனை கெக்கெலி சூழ்ந்திருந்தது.

விழுந்ததை காரணம் காட்டி எப்பொழுது வேண்டுமானாலும் பந்தயத்திலிருந்து நீக்கிவிடலாம் என்றிருந்தனர் சிலர்.

தெரு தன் அடையாளம் இழந்ததை அறியாமல் நீண்டு கிடந்தது.

காதலின் தருணங்கள்

அவர்கள் உலகப்புகழ் பெற்ற நாட்டுப்புறவியலாளரின் வகுப்பில் பாடம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர் அவர்களனைவரையும் ஒவ்வொருவராக அவர்கள் முதல் பல் விழுந்தபோது என்ன செய்தார்களென்று சொல்லச் சொல்லியிருந்தார். சாணியுருண்டையில் பொதிந்து கூரையின் மேல் தூக்கிப்போட்டதை சொல்ல வெட்கப்பட்டு அவன் தனக்கு நினைவில்லை என்று பொய் சொன்னான். அவனுக்கு அடுத்து உட்கார்ந்திருந்த அவள் தங்கள் நாட்டில் முதல் பல் விழுந்தவுடன் குழந்தைகள் எலி வளையின் வாயிலில் விழுந்த பல்லை வைத்து ஒரு பழம் பாடலை பாடுவார்களென்றும் தானும் அதையே செய்ததாகவும் சொல்லி அவள் அந்த பாடலை பாடியும் காண்பித்தாள். பல வருடங்களுக்குப் பிறகு, அவள் அன்றைக்கு “எலியே, எலியே” என்று புரியாத அன்னிய மொழியில் பாடிய தருணத்திலேயே தான் அவளிடத்தில் காதல் வசப்பட்டான் என்று அவன் நினைவுகூர்ந்தான். முடிக்கற்றைகள் முகத்தில் விழ குழந்தைமையும் குதூகலமும் அவளிடத்தில் நிறைந்திருந்த கணம் அது.

அவர்கள் மலைப்பாதையில் நடந்து கொண்டிருந்தார்கள்; அவள் கழுத்தில் பாய் ஸ்கவுட்ஸ் அணிவது போல சிகப்பு கைக்குட்டையை அவள் கட்டியிருந்தது அவனை பாடாய் படுத்திக்கொண்டிருந்தது. வெள்ளை பேண்ட்டுக்கும் வெள்ளை கோட்டுக்கும் அது அழகூட்டியது மட்டுமில்லாமல் அவள் கழுத்தைத் திருப்பும்போதெல்லாம் அந்த கைக்குட்டை அவளை மேலும் மேலும் ஒயிலாக்கிக்கொண்டிருப்பதாக அவன் நினைத்தான். அவள் எதிர்பார்க்காத கணத்தில் மெலிதாக முத்தமிட்டான். முகம் சிவந்து நின்றவளிடத்தில் பூரிப்பு இருந்தது. அதன் பிறகு இருவரும் கைகோர்த்தபடி தங்கள் தாய் மொழிகளில் சிறு சிறு பாடல் வரிகளை முணுமுணுத்தபடியே சென்றனர்.

மலையிலிருந்து இறங்கிய வேனில் அவர்கள் இருவரும் அருகருகே உட்கார்ந்திருந்தனர். அவள் இயல்பாக அவனை தன்னருகே இழுத்து காதில் ரகசியம் சொன்னாள். வேனே பரபரத்தது; அவர்களிடையே உடலுறவு ஏற்பட்டுவிட்டதாக கிசுகிசுத்தது; அதுவே பின்னர் ஊர்க்கதையாயிற்று.

அவர்களிடையே வேறுபாடுகள் கனத்துக்கொண்டிருந்தன; பல நூறு கடிதங்களை அவர்கள் பரிமாறிக்கொண்டிருந்தபோதும், பல முறை சந்தித்துகொண்ட பிறகும், ஊரே அவர்களை காதலர்கள் என்று புறம்பேசியபோதும், அவர்கள் தங்களுக்குள் எதையும் அறிவித்துக்கொள்ளவில்லை. அவளை அவன் பெரு நகரத்திற்கான பஸ்ஸில் ஏற்றி வழி அனுப்பி வைக்க வந்தபோது, அவள் பஸ்ஸில் ஏறியபின், தூரத்து மறைவிலிருந்து அவள் தன்னை கண்களால் தேடுகிறாளா என்று வேவு பார்த்தான்.

பிரிவுக்கு பின், கடிதங்கள் குறைந்து படிப்படியாய் நின்றே போய்விட்டது. அவளுடைய தோழி திடீரென அவனை பார்க்க வந்தபோது அவர்கள் உறவு கற்பனை அல்ல என்று நம்பத் தொடங்கினான். ஆனால் அவர்கள் மீண்டும் சந்தித்தபோது அவர்கள் வேறு வேறு நபர்களாகியிருந்தனர்.

தோழியிடமிருந்து அந்த மின்னஞ்சல் வந்தது: அவனுக்கு அந்த செய்தியை தெரிவிக்க தாமதமாகிவிட்டதாம், பல மாதங்கள் கடந்துவிட்டதாம். ஒரு வெள்ளி இரவொன்று தன் அபார்ட்மெண்டுக்கு திரும்பிய அவள் மீண்டும் எழுந்திருக்கவே இல்லையாம். அவன் அவளுடைய புகைப்படங்கள் கிடைக்குமா என்று கேட்டு எழுதினான். மற்றபடி நிச்சலனமாயிருந்தான். தினசரி அரை லிட்டர் வோட்கா குடித்தால் இப்படிதான் ஆகும் தினசரி ஐம்பது சிகரெட் குடித்தால் வேறெப்படி ஆகும் என்று அவ்வபோது அவளை மனதிற்குள் திட்டுவான். அவளுடைய விரல்கள் அவளுடைய உடலுக்கு பொருத்தமில்லாமல் சின்னதாக இருக்கும் என்று ஒரு நாள் நினைவு வந்தபோது ஊரையே நிறைக்கும் கேவலுடன் மனமுடைந்து அழுதான்.

Saturday, September 4, 2010

தொலைந்து போன நண்பனும் நானும்

நாங்கள் சிந்துபூந்துறையில் இருந்தபோது பொன்னுசாமி பக்கத்து தெருவில் இருந்தார். நாங்கள் தியாகராஜ நகருக்கு குடி பெயர்ந்தபோது அங்கே பக்கத்து தெருவிற்கு அவர் ஏற்கனவே குடி வந்திருந்தார். தியாகராஜ நகரிலிருந்து வியர்க்க விறுவிறுக்க பொன்னுசாமி என்னைப் பார்க்க சிந்துபூந்துறைக்கு வருகிற சிரமம் இனி அவருக்கு இல்லை என்றேன். ஆனாலும் அவரை ஒரு தொந்திரவாகவே ஆரம்பத்தில் நினைத்தேன். எப்பொழுது வரும்போதும் பிளாஸ்டிக் கூடைப்பை ஒன்றில் அவருடைய கவிதைகளை குயர் கணக்கில் கொண்டு வருவார். என்னுடைய மன நிலை என்ன என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் கவிதைகளைப் படித்து உடனடியாக கருத்து சொன்னால்தான் ஆயிற்று என்று அடம்பிடிப்பார். வீட்டில் அம்மா, அப்பா, ஆச்சி என்று பெரியவர்கள் இருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் பீடி பத்தவைத்தபடி என்னுடைய கருத்துக்காக பதற்றத்துடன் இருப்பார். மூன்று கவிதை தாண்டுவதற்குள் அறையை பீடிப்புகை நிறைக்கும். அவர் தன்னை தீவிர இடதுசாரியாக கணித்திருந்ததால் அவருடைய கவிதைகள் எல்லாமே வெளிப்படையான கோஷங்களாக இருக்கும். எனக்கு அவை கவிதைகளாகப்படவில்லை என்பது நான் வாயைத்திறப்பதற்கு முன்பே அவருக்குத் தெரிந்துவிடும்; நான்தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி ஆயிற்றே எனக்கு எப்படி அவரின் கவிதைகள் பிடிக்க முடியும்? நமுட்டுப் புன்னகையுடன், பெரிய மீசையை முறுக்கிவிட்டபடி, வியர்வை ஆறாமல், என் கருத்துக்காக காத்திருப்பார். நானும் அவரை ஏமாற்றியதே இல்லை. தயவு தாட்சண்யமில்லாமல் அவருடைய கவிதைகள் குப்பை என்று நிரூபிப்பேன். பதற்றமாகவே வீட்டுக்குக் கிளம்பிப்போவார்.

பல நாட்களாக பொன்னுசாமி என்னைப் பார்க்க வராமல் இருந்ததால் மனம் அவரைத் தேடிற்று. முதல் முறையாக நான் அவரைத் தேடி அவர் வீட்டுக்குப் போனேன். அன்றுதான் எனக்கு அவருக்கு மணமாகி நான்கு வயதில் மகனிருப்பதும், அவர் வயதான அப்பா, அம்மாவுடன் இருப்பதும் தெரியவந்தது. உற்சாகமாக வரவேற்றார். சம்பளமில்லா விடுப்பு எடுத்துக்கொண்டு மூன்று வாரங்களுக்கு மேலாய் கவிதை எழுதிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். வீடு முழுக்க மவுனமான பதற்றம் பரவியிருந்தது. வேலைக்குப் போய் சம்பாதிக்காவிட்டால் மனைவி அவள் அம்மா வீட்டுக்கு போய்விடப்போவதாய் தன்னை மிரட்டுவதாகச் சொன்னார். அவர் அப்பாவின் கண்களில் அவருக்கு கவிதை லபிக்க வேண்டுமே என்ற கவலை நிரம்பியிருந்தது.

பொன்னுசாமி அன்றைக்கு அவருடைய அறையில் உட்கார்ந்திருந்த விதம் இன்றைக்கும், சுமார் பதினாறு வருடங்களுக்குப் பிறகும், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. பிளாஸ்டிக் கூடை சேரில் அவர் உட்கார்ந்திருக்க, அறை முழுக்க புல் ஸ்கேப் தாள்கள் சரமாரியாய் கிடந்தன. அவர் முழு வெள்ளைத் தாளில் மூன்று அல்லது நாலு வரி கொள்ளும்படி குண்டு குண்டாய் எழுதுவார். நிறைய பக்கங்களை குறைவான காலத்தில் எழுதிவிடவேண்டும் என்ற எல்லா தமிழ் எழுத்தாளர்களின் ஆதங்கம் அவருக்கும் இருந்தது. மூன்று வாரவிடுப்பில் ஆறாயிரம் பக்கங்கள் எழுதியிருந்தார். எங்கே அவ்வளவையும் படித்து கருத்து சொல்ல வேண்டுமோ என்று நான் கலவரமடைந்தேன்.

என் வீடு துர் மரணங்களினால் நிரம்பி, நான் தன்னந்தனியாக, மனப்பிரேமையுற்று ஆச்சியுடன் தியாகராஜ நகர் வீட்டில் இருந்தபோது என்னைப் பார்க்க வரும் ஒரே நபராக பொன்னுசாமி மட்டுமே இருந்தார். அப்பொழுது அவருடைய பிளாஸ்டிக் கூடையில் கவிதை தாள்களுடன் எனக்காக அவர் வீட்டிலிருந்து கொண்டுவரும் பலகாரங்களும் இருக்கும். அவருடன் சேர்ந்து பீடி புகைப்பேன். வீட்டிற்குள்ளேயே அடைந்திருக்காதீர்கள் என்று என்னை வெளியே வாக்கிங் கூட்டிபோவார். வழக்கம்போல் என்னுடைய அப்போதைய நிலைமையிலும் அவர் அவருடைய கவிதைகளைப் பற்றிய எனது அபிப்பிராயங்களைக் கேட்கத் தவறவும் இல்லை நானும் அவர் கவிதைகளை அங்கீகரித்து ஒரு வார்த்தை சொல்லவும் இல்லை.

ஆகப் பெரிய கவிதையை எழுதியே தீர வேண்டும், அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம், என்ன பிரயத்தனம் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற பொன்னுசாமியின் அணுகுமுறை எனக்கு நியாயமானதாகவே பட்டது. ஆனால் கவிதை வரவேண்டுமே அதற்கு என்ன செய்வது? என் அளவுகோல்களின்படி என்றில்லாமல் அவருடைய அளவுகோல்களையே எட்ட முடியாமல் அவர் கீழே விழுந்துகொண்டேயிருந்தார். என்னுடைய அவரைப் பற்றிய மனப்பிம்பமே என்னுடைய நிலைமையாய் அடுத்த பதினாறு வருடங்களுக்கு ஆகப்போகிறது என்று எனக்கு அப்போது தெரி்ந்திருக்கவில்லை.

ஒரு வரி கூட எழுத சித்திக்காமல் வெற்றுத்தாளையும், வெற்று கம்ப்யூட்டர் ஸ்க்ரீனையும் பார்த்துகொண்டே பதினாறு வருடங்களை கழித்திருக்கும் எனக்கு பொன்னுசாமியின் அவஸ்தை புரிகிறது. அல்லது புரிய ஆரம்பித்திருக்கிறது.

ஊர் மறந்து, சுற்றம் மறுத்து சென்னைக்கு இடம் மாறியபின், பல வருடங்களுக்குப் பின் பொன்னுசாமியைப் பார்க்க தியாகராஜ நகருக்குப் போனேன். தொடர்பு அறுந்திருந்தது. அவர் முழுமையான பைத்தியமாக மாறி ஓடிப் போய்விட்டதாகவும் மற்றவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு கிராமத்திற்குப் போய்விட்டதாகவும் சொன்னார்கள்.

நான் என்னை எப்படியாவது மீட்டெடுத்து எழுதியே தீருவது என்றிருக்கிறேன்.