Friday, August 26, 2011

கோமாளித்தொப்பியை அணிவது எப்படி?


கோமாளித்தொப்பி எல்லோருக்கும் உரியது அல்ல. கோமாளித்தொப்பியை வெளிப்படையாக அணிந்திருப்பவர்கள் மறைமுகமாக அணிந்திருப்பவர்கள் என எல்லொருமே அதன் மகத்துவத்தைக் குறைக்கவே செய்கிறார்கள். உடனடியாக விக்கிப்பீடியாவைப் பார்த்து தொப்பி என்றால் குல்லா அதை வழுக்கையை மறைப்பதற்கும் தட்பவெட்பச் சூழல்களில் இருந்து தலையை பாதுகாத்துக்கொள்வதற்கும் என்று அர்த்தப்படுத்திக்கொண்டீர்களென்றால் அது உங்கள் விருப்பம் சீக்கிரம் நரையேற்றும் கிழப்பருவம் எய்து காலம் கெட்டுப்போய்விட்டது என்று தாலுகா ஆபீஸ் தாழ்வாரங்களில் புலம்பித் திரிவீர்கள். இந்த செயல்முறை விளக்கக்குறிப்பினை வாசித்தீர்களென்றால் உங்கள் வாழ்க்கை மாறினாலும் மாறக் கூடும்.

கோமாளி என்றவுடனேயே அரசன் - விதூஷக இரட்டைகளான அக்பர் - பீர்பால், கிருஷ்ணதேவராயர் - தெனாலிராமன், ஷேக்ஸ்பியரின் அரசன் - முட்டாள் நினைவுக்கு வரலாம். அதிகாரத்தின் முட்டாள்த்தனம் - அதிகாரமின்மையின் மேதமை என்ற எதிர்நிலைகளில் கட்டப்படும் இந்த இணைவு கோமாளித்தொப்பியை அணிவதற்கான யத்தனத்தை எளிதில் திசை திருப்பிவிட்டு கேவல முடிவுகளை உருவாக்கிவிடும், இந்த இருமையை முதலிலேயே புறங்கையால் ஒதுக்கிவிட்டுவிட வேண்டும். 

மௌனி விரித்த மெய்யியல் வலையான ‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?’ என்ற வாசகத்தின் பிடியிலிருந்து எவன் புத்திபூர்வமாகவும் தந்திரமாகவும் தப்பி உக்கிரம் பெறுகிறானோ அவனே கோமாளித்தொப்பியை அணிவதற்கான முதல் தகுதியை பெறுகிறான். இது ஒரு முதல் நிலைத் தகுதி மட்டுமே. இதர ஒப்பனைகள் பூர்த்தியாகாமல் கோமாளித்தொப்பியை ஒருவன் அணியமுடியாது.

கண்களுக்கு அஞ்சனம் தீட்டி பார்வையை கூர்மையாக்கவேண்டும். இந்தப் படிநிலையில் நீட்ஷேயின் ‘ஆனந்த அறிவியலை’ வாசிப்பது உதவிகரமாக இருக்கும். இந்த புத்தகத்தை வாசித்து வருகையில் கண்ணாடியில் அடிக்கடி முகத்தைப் பார்க்கவேண்டும். இதழ்களில் லேசாக உள்ளடக்கிய நமுட்டுச் சிரிப்பு தோன்ற ஆரம்பிக்கும். இதழ்களின் கடைக்கோடியில் பைத்திய ரேகை தோற்றமளிக்கும்.

பைத்திய ரேகை விரிந்து விரிந்து கன்னக்கதுப்புகளை தொட யத்தனிக்கையில் பாரதி, பட்டினத்தார், பாம்பாட்டிச் சித்தர், காகபுசுண்டர் ஆகியோரின் பிரதியாக்கங்களையும், கூடவே முத்து காமிக்ஸையும் கூர்மையாக வாசித்து வரவேண்டும். உங்களுடைய கண்களின் பிரகாசத்தில் குறும்பு கொப்பளிக்க ஆரம்பிக்கும். சிலருக்கு கோரைப்பற்கள் தோன்றுவதும் சகஜமே. அதற்காகப் பயந்துவிட வேண்டாம். களி வெறி கொண்டு ஆடவேண்டும் என்று தோன்றும்போது கோட்டைவிட்டுவிடக்கூடாது ஆடித்தீர்த்துவிட வேண்டும். வாழ்க்கையிலே கிடைக்கும் ஒரே சந்தர்ப்பம் அது. உங்களைப் பார்த்து எல்லோரும் இவ்வமயம் சிரிக்க ஆரம்பித்திருப்பார்கள். அவர்களைப் பார்த்தும் பார்க்காதது போல் மயிரே ஆச்சு என்றிருங்கள். 

இனிமேல்தான் நெருக்கடியான கட்டம். இது ஒரு மணி நேரமும் நீடிக்கலாம். பல ஆண்டுகளும் நீடிக்கலாம். உங்களைப்பார்த்து சிரித்தவர்கள் எல்லோரும் வெற்றிபெற்றவர்களாக மாறி விடுவார்கள். நீங்கள் உட்கார்ந்த இடத்திலேயே அசையாமல் இருப்பீர்கள். சாதாரண காரியங்களைக்கூட உங்களால் செய்யமுடியாமல் போகும். எதிலாவது முட்டாமல் சாலைகளைக் கடக்க முடியாது. தலைகீழாக நின்றாலும் உங்கள் கணிணி மட்டும் இணையத்தோடு தொடர்புகொள்ளாது. சிந்தாமல் சிதறாமல் எதையும் சாப்பிட முடியாது. கனவெது கற்பனையெது யதார்த்தமெது என்று தெரியாமல் குழம்புவீர்கள். இவையெல்லாம் நல்ல அறிகுறிகளே. உங்கள் திக்கற்ற நிலையைக் கண்டு பேரழகிகள் உதவுவார்கள். ஆண்கள் கைகொட்டிச் சிரித்துவிட்டு போய்கொண்டேயிருப்பார்கள். இந்த சமிக்ஞைகள் காண ஆரம்பித்துவிட்டால் கோமாளித்தொப்பியை கையில் எடுத்துக்கொள்ளலாம். 

ஆந்தோனின் ஆர்த்தோவின் வாழ்க்கை வரலாறை உன்னிப்பாக படியுங்கள். அவன் மன நல விடுதியிலிருந்து பாரீஸ் நகர ரயில் நிலையத்தில் வந்திறங்கிய காட்சியை மனதிற்குள் பல முறை நடித்துப் பாருங்கள். துக்கம் தொண்டையை அடைப்பதால் உங்களுக்கு மன நடிப்பு சித்தியாகாது. வெர்னெர் ஹெர்சாக் இயக்கத்தில் கின்ஸ்கி நடித்த திரைப்படங்களை பல முறை பாருங்கள்.  கின்ஸ்கி போலவே நடையுடை பாவனை பழகுங்கள்.

இந்த வழிகாட்டும் குறிப்பை சுத்தமாக மறுதளித்துவிட்டு அந்த கோமாளித்தொப்பியை எடுத்து அணிந்துகொள்ளுங்கள்.

பிறகுதான் மவனே வேடிக்கை ஆரம்பம்.  மாயாஜாலவித்தையான உங்கள் வாழ்வை இதர மடிசஞ்சிகள், தயிர்வடைகள் போல மதமாக மாற்றாமல் அறிவியலாக மாற்றிவிட்டீர்கள். உங்கள் கடவுளர்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள் பாருங்கள். 

புகைப்படத்திற்கு போஸ் கொடுங்கள், ப்ளீஸ்!

1 comment:

ஜமாலன் said...

//மௌனி விரித்த மெய்யியல் வலையான ‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?’ என்ற வாசகத்தின் பிடியிலிருந்து எவன் புத்திபூர்வமாகவும் தந்திரமாகவும் தப்பி உக்கிரம் பெறுகிறானோ அவனே கோமாளித்தொப்பியை அணிவதற்கான முதல் தகுதியை பெறுகிறான். இது ஒரு முதல் நிலைத் தகுதி மட்டுமே. இதர ஒப்பனைகள் பூர்த்தியாகாமல் கோமாளித்தொப்பியை ஒருவன் அணியமுடியாது//

இந்த வரிகள் அருமை. இடுகை முழுவதும் சிரிப்பையும், நமது நிகழ்காலச் சூழலையும் நடித்துக்காட்டகிறது. ))