Saturday, September 24, 2011

சமணர்கள் ஏன் நிகண்டுகளைத் தயாரித்தார்கள்?


வீ.அரசுவின் அழைப்பின் பேரில் சில வருடங்களுக்கு முன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் சமண நிகண்டுகள் பற்றி உரையாற்றினேன். வேறு ஏதோ தேடப்போக அந்த உரைக்காகத் தயாரித்த குறிப்புகள் கிடைத்தன.அந்த குறிப்புகளில் சிலவற்றை இங்கே பதிவேற்றுகிறேன்.

 என்னுடைய கேள்விகளெல்லாம் சமண முனிவர்கள் ஏன் அகராதி தயாரிப்பில் ஈடுபட்டார்கள்? சமண மதத்திற்கும் அகராதி தயாரிப்பதற்கும் என்ன சம்பந்தம்? நிகண்டுகளிலிருந்து அவற்றின் தயாரிப்புத் திட்டங்களை அனுமானிக்க இயலுமா? அவ்வாறே அந்த தயாரிப்புத்திட்டங்கள் தெரியவந்தால் அவற்றிலிருந்து எந்த தத்துவ நோக்கு சமண நிகண்டுகளின் உள்தர்க்கத்தைத் தீர்மானிப்பதாக இருந்தது என்று அனுமானிக்க இயலுமா ? இதுவரைக்கும் கல்விபுல ஆய்வாளர்கள் எழுதியவற்றுள் சமண நிகண்டுகள் பற்றிய பொதுவான விவரணைகள், வரலாற்று செய்திகள் இடம் பெற்றிருக்கின்றனவே தவிர என்னுடைய கேள்விகளுக்கான விடைகள் எதுவும் கிடைக்கவில்லை. என் யூகங்கள் சிலவற்றை சுருக்கமாக இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

சரஸ்வதி மகால் வெளியிட்ட பதார்த்தசாரம் என்ற சமண தத்துவ நூல் உயிருள்ள பொருள் உயிரற்ற பொருள் அனைத்துமே அணுக்களால் கட்டமைக்கப்பட்டவை அவை கடவுளின் துணையின்றியே தன் போக்கில் இயங்குகின்றன என்று சொல்கிறது. அதாவது கடவுள் என்றால் இங்கே உலகைப்படைத்து வழி நடத்திச் செல்கிற மனிதனுக்கு மேம்பட்ட சக்தி என்று மட்டுமே பொருள்கொள்ளலாகாது. மனித அறம் சார்ந்து, மனித அறத்திற்கு செவி மடுத்து, மனிதனுக்கு மேல் இயங்குகின்ற இயற்கை சக்தி ஒன்று இல்லை என்றே சமணரின் கடவுள் மறுப்புக்கொள்கையை நாம் பொருள்கொள்ளவேண்டும். பிராகிருதமும் பாலியும் கலந்து பழைய அர்த்தமாகதியில் எழுதப்பட்ட பதார்த்தசாரம், இயற்கையின் மனித அறமற்ற தன்மையை (கடவுள் இல்லாத தன்மையை) அறிவதில் தேவ மூடம், உலக மூடம், பாஷாண்டி மூடம் என்ற மூன்று தடைகள் (சமண மொழியில் மூன்று குற்றங்கள்) ஏற்படுகின்றன என்று சாடுகிறது. தேவ மூடம் கடவுள் நம்பிக்கையைக் குறிக்கிறதென்றால் உலக மூடம் இயற்கையை அளவுக்கு அதிகமாக மனிதன் பயன் படுத்துவதைக் குறிப்பிடுகிறது. சமண சிறு காப்பியங்களான யசோதரகாவியம், உதயணன் கதை ஆகியவற்றில் உலக மூடத்தை கிண்டலடிக்கும் நகைச்சுவை பல இடங்களில் காணக்கிடைக்கிறது. இயற்கையை தேவைக்கதிகமாக பயன்படுத்துவதின் உருவகமாக அதிகம் சாப்பிடுதல் சமண நகைச்சுவையில் அதிகம் காணக்கிடைக்கிறது. பாஷாண்டி மூடம் என்றால் என்னவென்று தெரியவில்லை. இந்தக்கட்டுரைச் சுருக்கமாகக்கூட இருக்கலாம்.

மனிதனுக்கான அறத்தை மனிதன் தான் உருவாக்கவேண்டுமே தவிர இயற்கையோ கடவுளோ மனிதனுக்கான அறத்தைத் தரமாட்டார்கள் என்பதே சமணக்கோட்பாடு. சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுவதற்கான (first prison reform in human history) தர்க்கத்தையும் இந்தக் கோட்பாட்டினை ஒட்டியே இதர சமண பனுவல்களிலும் காணலாம்.

ஆக உயிரற்றது, உயிருள்ளது அனைத்தையுமே மனித அறிவினுள் எனவே மனித அறத்தினுள் மொழியின் மூலமும் கணிதத்தின் மூலமும் கொண்டுவருவதே சமணர்கள் அகராதி தயாரிப்பிலும் வானியல் மற்றும் சோதிட கணிதத்திலும் ஈடுபட காரணம் என்று நினைக்கிறேன்.

ஒன்றைப்பார்த்து வியந்து ஐ என்று ஒலிஎழுப்புகிறோம் என்றால் அவ்வொலியை வியப்புசொல்லாகவே கருதவேண்டும் என்கிறது தொல்காப்பியம். இந்த அடிப்படை சொல்லாக்க முறைமையையே சமண நிகண்டுகளின் ஆசிரியர்கள் பின்பற்றினார்கள் என்று நம்ப இடமிருக்கிறது. சொற்களின் பெருக்கத்திற்கு அவர்கள் பிற மொழிகளையே சார்ந்திருந்தார்கள். பிற மொழி, பிற பண்பாட்டு கலப்பற்று தமிழ் மொழியும் தமிழ் சிந்தனையும் வளர்ச்சிபெற்றது தமிழ் சிந்தனையை இந்த மண்ணின் தூய சிந்தனையாக அடையாளம் காணமுடியும் என்பது மூடங்களில் ஒரு வகை அல்லாமல் வேறு என்ன?


விருப்பமுள்ளவர்கள் Joseph, George Gheverghese. The Crest of the Peacock Non European roots of mathematics. Princeton University Press, 2000. என்ற புத்தகத்தில் சமண கணிதம் பற்றிய அத்தியாயத்தைப் படித்துப்பார்க்கலாம். சமணரின் அறிவியலை குறிப்பாக அணு அறிவைப் பற்றிய விளக்கமான கட்டுரையை புதுவை ஞானம் எழுதியுள்ளார். அவரும் பதார்த்தசாரம் நூலையும் The Crest of Peacockஐயும் குறிப்பிடுகிறார் என்றாலும் சமணர்கள் ஏன் நிகண்டுகளைத் தயாரித்தார்கள் என்பதை ஒட்டிய என் கேள்விகளுக்கான விடைகள் அவர் கட்டுரையில் இல்லை. தன்னளவிலேயே முக்கியமான புதுவை ஞானத்தின் கட்டுரையை இந்தச் சுட்டியில் வாசிக்கலாம்: http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60501068&format=html&edition_id=20050106

No comments: