Thursday, October 6, 2011

ஸ்டீவ் ஜாப்ஸ்


ஆப்பிள் கணிணி நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் நேற்று மரணமடைந்ததைத் தொடர்ந்து இணையம் முழுக்க எழுதப்படும் அஞ்சலிகள் தவறாமல் ஜாப்ஸ் அறுபதுகளில் எழுந்த ஹிப்பி எதிர்கலாச்சார குழுக்களின் வாழ்வியல் முறைகளினாலும் கலைகளினாலும் தாக்கம் பெற்றவர் என்பதினைக் குறிப்பிடுகின்றன. இந்தத் தாக்கத்தினை உற்று கவனிப்பது நமக்கு அவசியமாகும். அமெரிக்காவின் வியட்நாம் போருக்கு எதிரான பரவலான இயக்கங்களே எதிர்கலாச்சார வாழ்வியலாகவும் கலைகளாகவும் இசையாகவும் இலக்கியமாகவும் பரிணமித்தன. ஆண்-பெண் சம உறவு, அதிக பட்ச ஜனநாயகம், பாலியல் சுதந்திரம், இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்வு, கூட்டுப் பரிணாம வளர்ச்சி, வன்முறையற்ற சிறு குழு வாழ்வு, தன் மதங்களைத் தவிர்த்து பிற மதங்களைக் கற்றல், பிரஞ்கையின் அறியப்படாத தளங்களைக் கண்டறிதல், புதிய கலை வடிவங்களை கண்டுபிடித்தல், எளிமையின் அழகியலைப் பேணுதல் என்று பல வழிகளில் எதிர்கலாச்சார இயக்கங்கள் தங்களை வெளிப்படுத்தின. ஆலென் கின்ஸ்பெர்க் இந்து மதத்தின் தாக்கத்திற்கு உள்ளானதும், ஜேக் கெரோக் பௌத்தரானதும் இந்த எதிர்கலாச்சாரப்போக்கின் வடிவங்களே. பீட்டில்ஸ் இசைக்குழுவினர் இந்திய யோகிகளின் சிஷ்யர்களானதும் இவ்வாறகவே நடந்தது. பீட் சீகர் போன்றோரின் தலைமையில் நாட்டுப்புற இசையின்பால் பெரும்பான்மையினரின் கவனம் பெற்றதும் எதிர்கலாச்சார இயக்கங்களின் மூலம்தான். எதிர்கலாச்சாரக் குழுக்கள் அமைத்த கம்யூன்கள் இவற்றில் முக்கியமான கலாச்சார பரிசோதனைகளாகும். இவை ரஷ்யாவில் டால்ஸ்டாய் அமைத்த பண்ணையார் கம்யூன்கள் போன்றவை அல்ல. மனித பரிணாம வளர்ச்சி என்பது தனி மனிதனிடத்தில் நிகழ்வதில்லை குழுவினரிடத்தே கூட்டாக நிகழக்கூடியது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டவை. போதைப் பொருள் உபயோகத்தை பிரஞ்கையின் அறியப்படாத தளங்களைக் கண்டறிய பயன்படுத்தத் தயங்காதவை. இந்த ஹிப்பி கம்யூன்களின் வாழ்க்கையின் வெற்றி தோல்விகளை தாமஸ் பிஞ்ச்சனின் Gravity’s Rainbow நாவலும் ரொனால்ட் சுகெனிக்கின் 98.6 நாவலும் காத்திரமாக பதிவு செய்கின்றன.

இந்த எதிர்கலாச்சார இயக்கங்களின் தொழில் நுட்ப முகமாக ஆரம்பித்தவர்தான் ஸ்டீவ் ஜாப்ஸ். அவர் கற்றுகொண்ட பௌத்தம் ஆப்பிள் பொருட்களின் எளிமை அழகியலைக் கட்டமைத்தது. மதக் குறியீடுகளின் மறைமுகமான பயன்பாடு ஆப்பிள் பொருட்களுக்கு எராளமான விசுவாசிகளை உருவாக்கியது. உதாரணமாக் ஒன்று: கடிக்கப்பட்ட ஆப்பிள் லோகோ, ஆதியாகமத்தில் கடவுளின் ஆணையை மீறி ஆப்பிளைக் கடித்து அறிவின் பாதையைத் தேர்ந்தெடுத்த ஆதாம் ஏவாளின் ஆப்பிளை மறைமுகமாக நினைவுகூர்கிறது. ஹிப்பிகளைப் போலவே தான் LSD எடுத்துக்கொள்வதை ஜாப்ஸ் பலமுறை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். மனித பரிணாம வளர்ச்சி என்பது கூட்டாகவே சாத்தியம் என்ற எதிர் கலாச்சார விழுமியமே கணிணிகள் எல்லோரையும் சென்றடையவேண்டும் எல்லோரும் பயனர்களாக வேண்டும் என்ற பாதையை ஜாப்ஸிற்குக் காட்டக்கூடியதாக இருந்திருக்கிறது.

ஆனால் அதே சமயம் சிறு குழு விழுமியங்களும் கண்டுபிடிப்புகளும் எல்லோரையும் சென்றடையச் செய்யும்போது, பொதுத் தளத்தை அடையும்போது, அவை எப்படி கார்ப்பரேட் நிறுவனங்களின் கொடூரங்களாகின்றன என்பதற்கும் ஸ்டீவ் ஜாப்ஸே சிறந்த எடுத்துகாட்டாவார். எதிர் கலாச்சாரக் குழுக்களின் விழுமியங்களில் தாக்கம் பெற்றவையே திறந்த அமைப்பாக்கம் பெற்ற மென் பொருள் இயக்கங்கள் (Open source software movements). கணிணியும் கணிணியின் மென் பொருட்களும் திறந்த அமைப்பாக்கம் பெற்றிருந்தால்தான் ஜனநாயக அறிவுப் பரவலாக்கம் நிகழும் என்ற அடிப்படையில் தனி காப்புரிமையை மென்பொருள்களுக்கு பெறுவதை மறுப்பவை திறந்த அமைப்ப்பாக்க மென்பொருள் இயக்கங்கள். இதனாலேயே திறந்த அமைப்பாக்க மென்பொருட்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. ஆனால் ஆப்பிளின் எந்த மென்பொருளுமோ அல்லது கணிணி உள்கட்டுமானங்களோ திறந்த அமைப்பாக்கம் பெற்றவையல்ல. மாறாக ஜாப்ஸையும் ஆப்பிள் நிறுவனத்தையும் போல கார்ப்பரேட் காப்புரிமை உரிமத்தைக் கறாராக நிலை நிறுத்தியவர்கள், அதன் மூலம் அதீத லாபம் அடைபவர்கள் வேறு யாருமே இல்லை எனலாம். இது தவிர ஆப்பிள் பொருட்கள் எல்லாமே சீனாவிலேயே சல்லிசாகத் தயாரிக்கப்பட்டு கொள்ளை விலைக்கு உலகம் முழுவதும் விற்கப்படுகின்றன. ஜாப்ஸின் இந்த மாற்றம் அவர் ஆப்பிளுக்கு இரண்டாம் முறை திரும்பி வந்தபோதுதான் நிகழ்ந்தது அவர் ஆப்பிளை லாபமீட்டும் நிறுவனமாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் என்றும் வாதிடக்கூடியவர்கள் இருக்கிறார்கள்.

ஸ்டீவ் ஜாப்ஸ் எந்த அறக்கட்டளைகளையும் நிறுவவில்லை; தன்னுடைய கல்லூரி நாட்களில் ஏழு மைல் நடந்துபோய் கலிஃபோர்னியாவிலுள்ள ஹரே கிருஷ்ணா இயக்கக் கோவிலில் இலவச மதிய உணவை தொடர்ந்து சாப்பிட்டதை அவர் பல பேட்டிகளில் சொல்லியிருந்தாலும் கூட.

இந்தக் கட்டுரையை நான் ஆப்பிள் மடி கணிணியில்தான் தட்டச்சு செய்கிறேன். ஆப்பிளுக்கு மாறியபின் என் கணிணி வேலைகள் எத்தனையோ மடங்கு சுலபமாக ஆகியிருக்கிறது.

சில முரண்பாடுகளைப் பற்றி வெளிப்படையாகப் பதிவு செய்ய ஸ்டீவ் ஜாப்ஸ் இந்த சந்தர்ப்பத்தினைத் தந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

எதிர்கலாச்சாரத்திற்கும் கணிணி தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பு பற்றி மேலும் படிக்க: http://books.google.com/books?id=2SNFpgX_WigC&printsec=frontcover&dq=cyberculture&ei=_kvOR-W3F4vIsQPJ7_m-Aw&sig=CzrAl__6QqNibx71d4Ap2f9SYVo#v=onepage&q&f=false

ஆப்பிள் தொழில் நிறுவனம் எப்படி மதக்குறியீடுகளைப் பயன்படுத்தியது என்பதற்கு கீழ்கண்ட சுட்டிகளிலுள்ள தகவல்களைப் படித்துப் பாருங்கள்.
http://futurima.wordpress.com/tag/apple/
http://www.amazon.com/Third-Apple-Personal-Computers-Revolution/dp/0151898502
http://en.wikipedia.org/wiki/Apple_(symbolism)

18 comments:

Anonymous said...

தகவல் பிழை. யுனிக்ஸ் திறந்த கட்டமைப்பு மென்பொருள் அல்ல. லினக்ஸைக் குறிப்பிடுகிறீர்களா? மேலும் ஆப்பிள் மென்பொருள் எதுவும் லினக்ஸ் அடிப்படை கொண்டது அல்ல. ஓபன் சோர்ஸ் மீது தங்கள் கட்டமைப்பை உருவாக்குபவர்கள் அவற்றை விலை வைத்து விற்கவோ, காப்புரிமை பெறவோ முடியாது.

நீங்கள் உபுண்டு ஆபரேட்டிங் சிஸ்டத்தை ஆப்பிள் ஐ.ஓ, எஸ் உடன் குழப்பிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.


சரவணன்.

mdmuthukumaraswamy said...

யுனிக்ஸ் அமைப்பு open software foundationஉடன் தற்போது இணைந்துவிட்ட ஓபன் குரூப்பினுடையது என்று இந்த சுட்டியிலுள்ள கட்டுரை குறிப்பிடுவதை பாருங்கள்.
http://en.wikipedia.org/wiki/The_Open_Group
ஆப்பிள் ஓ.எஸ் யுனிக்ஸ் சார்ந்தது என்று கீழே சுட்டியிலுள்ள கட்டுரை குறிப்பிடுகிறது
http://en.wikipedia.org/wiki/Mac_OS_X

Anonymous said...

இல்லை எம்.டி.எம்! Open Source Foundation என்பது யுனிக்ஸ் சம்பந்தப்பட்ட not-for profit organisation. இதற்கும் Open Source Movement -க்கும் ஸ்நானப் பிராப்தி கூட இல்லை.

ஜாப்ஸ் ஓபன் ஸோர்ஸ் மென்பொருளை உபயோகித்துக்கொண்டு அதை விலைக்கு விற்று லாபம் ஈட்டியதாகக் கூறுவது அபாண்டம் மற்றும் தகவல் பிழையே. அவ்வாறு ஒருவரும் செய்ய இயலாது என்பதே உண்மை.

சரவணன்

Anonymous said...

பிழை திருத்தம்- என் கமெண்டில் 'Open Source Foundation' என்பதை 'Open Software Foundation' எனத் திருத்தி வசிக்கவும். தவறுக்கு மன்னிக்கவும்.

சரவணன்

ramanujam said...

நல்ல கட்டுரை. உலகமயமாக்கல், நுகர்வுக் கலாச்சாரத்தின் பிடியிலிருந்து ஸ்டீவ் ஜாப்ஸும் தப்பவில்லை.வியாபார மயமாக்கல்,நிறுவனமயமாக்கத்தின் போது முதல் அடி விழுமியங்களுக்குத்தான் விழுகிறது.

mdmuthukumaraswamy said...

பெயர் குழப்பமும், லைசன்ஸ்களின் வகைகளும் சரியான முடிவுக்கு வருவதை தடுக்கின்றன. அதில் மேலும் ஒரு வாக்கியம்:
Despite the similarity in name and the fact that both groups were based in Cambridge, Massachusetts, there was never any connection between OSF and the Free Software Foundation, neither is it associated with the technology non-profit Open Software Foundation based in Washington, DC[9] or Open Sysems, Inc.[10]

[edit]
இருப்பினும் உங்கள் கருத்தை மதித்து அந்த வரியை எடுத்துவிட்டேன்.

arulselvan said...

ஆப்பிளுடைய mac osx செயல்தளம் யூனிக்ஸ்ஸின் ஒருவகையான bsd மேல் கட்டப்பட்டது. அது mit லைசென்ஸில் புழங்குவதால் gpl கட்டுப்பாடுகள் கிடையாது. macosx ம் ஒருவகையான யூனிக்ஸ்தான்.

mdmuthukumaraswamy said...

என்னுடைய புரிதலும் அருள் செல்வன் கந்தசுவாமியின் புரிதல்தான். ஆனால் யுனிக்ஸ் சுத்தமான திறந்தவெளி அமைப்பாக்க லைசன்ஸ் உடையதா என்று அறிந்துகொள்ளமுடியவில்லை.

Anonymous said...

///இருப்பினும் உங்கள் கருத்தை மதித்து அந்த வரியை எடுத்துவிட்டேன்///

நன்றி! இப்போது உங்கள் கட்டுரையில் எனக்கு மறுப்பேதும் இல்லை.

ஆப்பிள் ஓ.எஸ். யுனிக்ஸ்-போன்ற ஒன்றாக (UNIX-like) இருக்கலாம். ஃப்ரீ சாப்ட்வேர் மூலவரான லினக்ஸே அப்படித் தோன்றியதுதானே.

யுனிக்ஸ் கண்டிப்பாக "Free Software Movement" சார்ந்தது அல்ல. அதாவது காப்பிரைட் கொண்டதே அன்றி, காப்பிலெஃப்ட் கொண்டது அல்ல. இதன் டிரேட் மார்க் ஓனரான நிறுவனம் தனது பெயரை 'ஓப்பன் குழுமம்' என்று வைத்திருப்பதே குழப்பத்துக்குக் காரணம்.

யுனிக்ஸ், லினக்ஸ், ஆப்பிள் ஓ. எஸ். வகையறாக்களில் வைரஸ் கிடையாது என்பது பெரிய நன்மை.

சரவணன்

சாத்தான் said...

பின்னணித் தகவல் சுவையாக இருந்தது. ஆப்பிள் தயாரிப்புகளில் ஐபோன் 4 தவிர வேறெதையும் நான் பயன்படுத்தியதில்லை. ஆனால் வடிவமைப்பு நேர்த்தியிலும் perfectionisத்திலும் ஜாப்ஸுக்கு இருந்த வெறியைக் காட்ட ஐபோன் 4 ஒன்றே போதும். ஜாப்ஸின்/ஆப்பிளின் வணிகச் செயல்பாடுகள் அயோக்கியத்தனமாக இருந்தாலும் ஜாப்ஸின் இடத்தை மறுக்க முடியாது. ஃபேக் ஸ்டீவ் ஜாப்ஸ் அருமையான இரங்கற்பா ஒன்று எழுதியிருக்கிறார்...

ராம்ஜி_யாஹூ said...

தமிழ் எழுத்து/இலக்கிய உலகில் சுஜாதா இல்லாததை உணர்கிறேன் மீண்டும் இப்போது

பாலா said...

http://www.opensource.apple.com/

ராம்ஜி: மிகச் சரி.

mdmuthukumaraswamy said...

Anonymous சரவணண் இந்த சுட்டியிலுள்ள தகவல்களையும் பாருங்கள்
http://www.apple.com/opensource/

பேயோன் said...

நல்ல பதிவு.

@ராம்ஜி^யாஹூ: ஒப்புக்கொள்கிறேன். குமுத விகட வாசகர்கள் சுஜாதா தயவின்றியே ஸ்டீவ் ஜாப்சை பற்றி தெரிந்துகொள்ளலாம். ஆனால் அந்த அனுபவம் அவ்வளவு வக்கணையாக இருக்காது. நமக்கு வாய்த்தவை திவச நூல்கள்தாம்.

Bala Venkatraman said...

nice views. Good post.

Bala Venkatraman said...

Nice Post. I got a good idea.

Anonymous said...

எம்.டி.எம். சுட்டிக்கு நன்றி.

///Major components of Mac OS X, including the UNIX core, are made available under Apple’s Open Source license allowing developers and students to view source code, learn from it and submit suggestions and modifications ///

இதன் பொருள் என்ன? சோர்ஸ் கோடு தருகிறேன், ஏதாச்சும் பிழை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்கிறோம் என்கிறார்கள். ஆனால் உபுண்டு போல ஆப்பிளிடம் வாங்காத பிற கணினிகளில் OS X ஐ இலவசமாக நிறுவிப் பயன்படுத்தவோ, அல்லது நீங்களே மாற்றியமைத்துக்கொள்ளவோ முடியாது. நீங்கள் இம்ப்ரூவ்மென்ட் ஏதாவது ஆலோசனை தந்தால் அதை அவர்களே அடுத்த பதிப்பில் உபயோகித்துக்கொள்வார்கள்!

இந்தவகையில் ஓபன் சோர்ஸ் முறையைப் பயன்படுத்துவதை "committed to open source" என்று அழைக்க முடியவில்லை.

அதே நேரம் இதில் பெரிய எதிக்ஸ் குறைபாடு இருப்பதாக நினைக்க முடியவில்லை. ஒரு வகையில் புத்தக ஆசிரியர்கள் காலம்காலமாக "Suggestions for improvements welcome" என்று போட்டுக்கொள்வதோடு ஒப்பிடலாம். புத்தகத்தில் தப்புக் கண்டுபிடித்துப் பதிப்பாளரிடம் தெரிவித்தால் அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்வார்கள். நமக்கு ஒன்றும் சன்மானம் எல்லாம் கிடைத்துவிடாது. அந்த மாதிரிதான் இதுவும்.

ஆக, ஆப்பிள் தானே முன்வந்து (சுயநலத்துடன்) ஓ.எஸ். இன் சோர்ஸ்கோடை வெளிப்படையாக அறிவிக்கிறது. ஆக அவர்கள் சாஃப்ட்வேர் ஓபன் சோர்ஸ்தான்- ஆனால் தளையற்றது (free) அல்ல. Proprietary வகையானதே.

தானே விரும்பி யாராவது ஆலோசனை தருவரானால் தரலாம் என்கிறது ஆப்பிள். இதற்கு உதவும்பொருட்டு சோர்ஸ்கோடை வெளியிடுகிறது. இது ஒருவகை சுயநலம்தான் என்றாலும் சட்டப்படியோ, நியாயப்படியோ (என் கருத்தில்) தவறு இல்லை.

யுனிக்ஸ் குறித்து- யுனிக்ஸின் சோர்ஸ்கோடு சில நிறுவனங்களோடு மட்டும் (வியாபார ஒப்பந்தங்கள் செய்துகொண்டு) பகிர்ந்துகொள்ளப்படுகிறது. இது வணிக நடவடிக்கையே. யுனிக்ஸ் இன்றும் ஒரு proprietary பொருள்தான். தளையற்றது அல்ல. ஆப்பிள் யுனிக்ஸ் உரிமையாளர்களுடன் (தற்போது ஓபன் குரூப்) ஒப்பந்தம் செய்துகொண்டு யுனிக்ஸின் மேல் தன் ஓ.எஸ் -ஐ உருவாக்குகிறது.

நன்றி எம்.டி.எம்.

சரவணன்.

Sridhar Narayanan said...

@சரவணன் - // இலவசமாக நிறுவிப் பயன்படுத்தவோ, அல்லது நீங்களே மாற்றியமைத்துக்கொள்ளவோ முடியாது \\

அப்படி இல்லையாம். APPLE PUBLIC SOURCE LICENSEல் இப்படி போட்டிருக்கிறார்கள்.

2.1 Unmodified Code. You may use, reproduce, display, perform, internally distribute within Your organization, and Externally Deploy verbatim, unmodified copies of the Original Code.....

2.2 Modified Code. You may modify Covered Code and use, reproduce, display, perform, internally distribute within Your organization, and Externally Deploy Your Modifications and Covered Code, for commercial or non-commercial purposes......

முழுவதும் படித்துப் பார்த்தால் அப்பாச்சி போன்ற ஓப்பன் சோர்ஸ் திட்டம் போலத்தான் தெரிகிறது.