Thursday, March 8, 2012

திகட்டத் திகட்டக் கொஞ்சுதல் 10


DJ போன பதிவிற்கு முக்கியமான ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார். அதைப் பலரும் தவறவிட்டிருக்கக்கூடும் என்பதினால் அவருடைய பின்னூட்டத்தையும் என் பதிலையும் கீழே தருகிறேன்.

--------------------------------------------
ஹார்ப்பர் லீயின் 'To kill a Mockingbird', மற்றும் வில்லியம் கோல்டிங்கின் 'Lord of the Flies' போன்றவற்றை இங்கு 10ம்/11ம் வகுப்புக்களில் பாடத்திட்டத்தில் வைத்திருந்தார்கள். நாவல்கள் வாசிக்கப் பிடித்திருந்தாலும் பரீட்சையில் என்ன மாதிரிக் கேள்வி கேட்டு பயமுறுத்துவார்கள் என்ற பதற்றத்தோடோ இவற்றை வாசிக்க வேண்டியிருந்ததென்பது என்னவோ உண்மைதான் :)

நீங்கள் குறிப்பிடுகின்ற மாதிரி Lord of the Flies வாசித்தபோது, சிறுவர்கள் என்பவர்கள் நாம் நினைத்துக் கொண்டிருக்கின்ற சிறுவர்களில்லை என்கிற ரொமாண்டிஸ கற்பிதங்களை அன்றையகாலத்தில் உடைத்தபோது எனக்கும் அதிர்ச்சியாய்த்தானிருந்தது. ஏன் இந்நாவலின் சிறுவர்கள் இப்படித் தனித்த தீவில் விடப்படும்போது வன்முறையாளர்களாக மாறுகின்றார்கள். பிறகு காப்பாற்றப்படும்போது மீண்டும் பழையபடி 'சிறுவர்களாக' மாறிவிடுகின்றார்கள்? என்கின்ற கேள்விகள் எழுந்தபடியே இருந்தன. ஆக சிறுவர்களாயிருந்தாலென்ன, வளர்ந்தவர்களாயிருந்தாலென்ன எல்லோருக்கும் ஒரு கண்காணிப்புச் சமூகம் தேவையாய் இருக்கின்றதா எனப் பின்னர் யோசிக்க வேண்டியிருந்தது. இதை இன்னொருவிதமாய் வளர்ந்தவர்கள் 'ஒழுங்காய்' இருக்க அரசு/இராணுவம்/பொலிஸ் என்கிற கண்காணிப்பு நிறுவனங்கள் தேவையாக இருக்கிறதா என நீட்சித்தும் ஒருவர் பார்க்க முடியும்.

ஆனால் இந்தக் கண்காணிப்பு நிறுவனங்கள் எப்படி மனிதர்கள் நிம்மதியாய் வாழத் தங்களின் இருப்பு அவசியம் என்பதை நுண்ணியதளங்களிலிருந்து கட்டியமைக்கின்றது என்பதை ஜோஸே சரமகோவின் 'Blindness' and 'Seeing' வாசித்தபோது பிற்காலத்தில் விளங்கியது.

ஆக நீங்கள் குறிப்பிடுவது போன்று எனக்கும் /நாவல் மறைமுகமாக முன்வைக்கும் மனிதனின் 'இயற்கையான இயல்பு' வன்முறையானது என்பதைப் பற்றி எனக்கு ஐயங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன./
----------------------------------------------
'இயற்கையானது', 'இயல்பானது' என்று சாதாரணமாக விவரிக்கப்படுபவை அனைத்திற்கும் வரலாறுகள் இருக்கின்றன. அந்த வரலாறுகளை அகழ்ந்தெடுப்பதன் மூலம், விவரித்து சொல்வதன் மூலம் அவை இயற்கையானவையோ, இயல்பானவையோ இல்லை எனக் கட்டவிழ்க்கலாம். இருப்பினும் 'மனித இயல்பு' வன்முறையானது, அது 'இயற்கையான' அதிகாரத்திற்கான உந்துசக்தியின் விழைவு என்பது நீட்ஷேயிடம் உருவான கருத்து. இதைக் கட்டவிழ்ப்பது என்பது தத்துவத்தின் சவாலான, சிக்கலான பிரச்சினைகளுள் ஒன்று. குழந்தைகளின்/குழந்தைகளுக்கான கதைகள், விளையாட்டுகள் ஆகியனவற்றையும் அவை சார்ந்த இலக்கியங்களையும் விவாதித்தால் ஒரு வேளை வழி புலப்படலாம். இன்னொரு வழி காண்ட்டினை தெரிதா விமர்சித்ததை துவக்கப்புள்ளியாகக்கொண்டு அறக்கருத்தாக்கங்களை நுட்பப்படுத்துவது. இந்த இரண்டுமே வழிகளுமே ஒரு கண்காணிப்பு சமூகத்தின் செயல்பாடுகளில் சில இடையீடுகளை நிகழ்த்தமுடியும். நேர்கோடற்ற முறையில் எழுதப்படும் இந்தக் கட்டுரைத்தொடரில் இந்த இடையீடுகளை நோக்கி நகரும் இழையை நீங்கள் சுட்டிக் காண்பித்திருப்பதற்கு நன்றி.
சமூகக் கண்காணிப்பு மனிதர்களை நிம்மதியாக வாழவிடுவதில்லை என்பதே என் தரப்பு. சரமகோவின் நாவலை வைத்து நீங்கள் எப்படி நேரெதிரான முடிவுக்கு வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லையோஸ் சரமகோவின் 'Blindness' நாவல் மட்டுமே நான் வாசித்திருக்கிறேன். 'Seeing' இன்னும் வாசிக்கவில்லை. சரமகோவின் literary geneology and kinship வேறு என்பது என் எண்ணம். கோசின்ஸ்கியின் 'Steps', சோல்சனிட்சனின் 'Cancer Ward', குந்த்தர் கிராசின் 'Tin Drum', எல்ஃப்ரெட் ஜெலினெக்கின் 'Lust' போன்ற நாவல்களோடு சேர்ந்து வாசிக்கப்படும்போது 'மனித இயல்பு' பற்றியும் சமுக கண்காணிப்பு நிறுவனங்கள் பற்றியும் வேறொரு கண்ணோட்டத்தினை பெறமுடியும்.
-----------------------------------------------------
ஆதிவாசி சமூக குழந்தைகளோடு விளையாடுவதும் கதை கேட்பதும் செறிவுமிக்க அனுபவங்களாகும். ஆதிவாசி சமூகங்கள் பெரும்பாலும் குழந்தைகள் பெரியவர்கள் என்ற வேறுபாட்டினை தங்கள் ஊடாட்டத்தினுள் கொண்டு வருவதில்லை. குழந்தைகளும் பெரியவர்களாகவே பெரும்பான்மையான சூழல்களில் நடத்தப்படுகின்றனர். விளையாட்டுகளையும், கதை சொல்லல்களையும், நடனங்களையும் பயனற்ற கேளிக்கைகளாக ஆதிவாசி சமூகங்கள் கருதுவதில்லை; வாழ்தலின் உன்னத கணங்களாகவே அவை கருதப்படுகின்றன. ஆதிவாசிகளின் கதை சொல்லலின்போதும் விளையாட்டின்போதும் மரம், செடி, கொடிகள், வான், நிலம், நீர், நதி, கடல், காடு, வன விலங்குகள், மனிதர்கள் என அனைத்தும் ஒரே வகை ஜீவன் ததும்பும் யதார்த்தமாகின்றனர். தான் வேறு இயற்கை வேறு என்ற பிரிவினை முற்றிலுமாக அழிக்கப்பட்டதாய் உணர்ந்த நிலையிலேயே கதை கேட்டலும் விளையாட்டும் நடக்கின்றன; அதே சமயத்தில் விளையாட்டின் வெற்றி தோல்விகள் சமூகத்தின் பிற தளங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை. சடங்குகளாகத கதைசொல்லல்களும் விளையாட்டுகளும் அந்நியர்களையும் வரவேற்பதாகவும் ஆதிவாசி சமூக உள் ஒப்பந்தங்களின் இறுக்கத்திற்கு அப்பாற்பட்டவையாகவும் இருக்கின்றன. கற்பனையும், புதுமையும், குழும வரலாற்றின் சூட்சும பதிவுகளும் குழந்தைகளின் விளையாட்டுக்களிலும் கதைகளிலும் இருப்பதாக ஆதிவாசி சமூகங்கள் நம்புகின்றன. ஆதிவாசி சமூகங்களின் இத்தன்மைகள் பரவலாக்கப்பட்டுவிட்ட நாட்டுப்புற கதைகளிலும்கூட காணக்கிடைக்கின்றன.⁠1
------------------------------------------
பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் பலரும் நாட்டுப்புறக்கதைகளை மறு உருவாக்கம் செய்து அதன் மூலம் ஒரு பூர்வகுடித்தன்மையினை இலக்கியத்துள் மீட்டெடுத்து காண்ட்டிய லட்சியவாதத்தின் பாற்பட்ட நவீனத்துவம் மறுதளிக்கும் மானிடவியல் தருணங்களை உயிர்ப்பூட்டியிருக்கின்றனர். தேவதைக் கதைகளை மறு உருவாக்கம் செய்யும்போது அதைத் தங்களுக்கு விருப்பமான கருத்தியலுக்கு ஏற்ப கதையை சிதைப்பதில்லை பின் நவீனத்துவ எழுத்தாளர்கள். புதிய கற்பனையான லட்சியங்களையும் உருவாக்குவதில்லை. லட்சியங்களின் அழிவைப் பற்றிய பேரழுகையும் கண்ணீரும் கம்பலையும் இல்லை. என்றாலும் பின் நவீனத்துவ எழுத்தாளர்களிடையே உள்ள வேறுபாடுகள் பல்வகையானவை; அவர்களுனூடே ஓடும் தத்துவச் சரடு ஒன்றாக இருக்கலாம் ஆனால் வெளிப்பாடுகள் ஒன்றானவையல்ல. அந்தத் தத்துவச் சரடினை பல்வேறு படைப்புகளிலிருந்து உருவி எடுக்க வேண்டும். முயற்சி செய்து பார்க்கலாம்.
டொனால்ட் பார்த்தல்மே ஏழு குள்ளர்களும் ஸ்னோ வைட்டும் என்ற தேவதைக் கதையை⁠2 மறு உருவாக்கம் செய்தது பின் நவீனத்துவ நாவல்களில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரிம் சகோதரர்கள் சேகரித்து செப்பனிட்டு வெளியிட்ட 'ஸ்னோ வைட் இளவரசி' தேவதைக் கதை ஐரோப்பா முழுவதும் பிரசித்தி பெற்ற தேவதைக் கதைகளுள் ஒன்று.
மரபான கதை இவ்வாறாகப் போகிறது:
முன்பொரு காலத்தில் ஜன்னலருகே உடகார்ந்து அரசி ஒருத்தி தைத்துக் கொண்டிருந்தபோது கை விரலில் ஊசி குத்திவிட்டது. விரலில் வழிந்த ரத்தத்தின் மூன்று துளிகள் கருங்காலி மர ஜன்னல் சட்டகத்தின் மேல் பெய்திருந்த பனியில் விழுந்தன. அதைப் பார்த்த அரசி இந்தப் பனியைய் போல வெள்ளையான தோலும், ரத்தத்தைப் போல சிவந்த உதடுகளும், கருங்காலி மரத்தைப் போல கருத்த கூந்தலும் உடைய மகள் எனக்குப் பிறந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தாள். அதி சீக்கிரத்திலேயே அவளுக்கு அவள் விரும்பிய வண்ணமே ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை' ஸ்னோ வைட்' என்று பெயரிட்டனர். பிரசவத்தின் போதே அரசி மரித்து விட்டாள். அரசன் வேறொரு அழகியை மணந்து கொண்டான். ஸ்னோ வைட் இளவரசி இவ்வாறாக மாற்றாந்தாயின் கண்காணிப்பில் வளர்ந்துவர நேரிட்டது. மாற்றாந்தாய் அரசியிடம் ஒரு மந்திரக் கண்ணாடி இருந்தது. அந்தக் கண்ணாடியைப் பார்த்து அரசி அடிக்கடி "Mirror Mirror on the wall, who is the fairest of them all?" என்று கேட்பாள். மந்திரக் கண்ணாடியும் அரசியே அழகி என்று சொல்லும். ஆனால் ஸ்னோ வைட் இளவரசிக்கு ஏழு வயதான போது மந்திரக்கண்ணாடி இளவரசியே உலகில் அழகானவள் என்று சொல்லியது. இதனால் ஆத்திரமடைந்த மாற்றாந்தாய் ஸ்னோ வைட் இளவரசியைக் கொல்ல உத்தரவிட்டாள். ஸ்னோ வைட் இளவரசியைக் கொல்வதற்குக் காட்டுக்குக் கூட்டிச் செல்லும் வேட்டையாள் அவளைக் கொல்ல மனமில்லாமல் காட்டிலேயே விட்டுவிட்டு திரும்பி விடுகிறான். காட்டில் ஸ்னோ வைட் இளவரசி ஏழு குள்ளர்களை சந்திக்கிறாள். அவள் ஏழு குள்ளர்கள் வீட்டில் வேலை செய்ய அவர்கள் அவளைப் பார்த்துக் கொள்கிறார்கள். மந்திரக் கண்ணாடி அரசி உலகிலேயே அழகானவள் அல்ல என்பதை அறிவிக்க ஸ்னோ வைட் இளவரசி உயிரோடு இருப்பதை அரசி அறிகிறாள். மாறு வேடமிட்டு குள்ளர்கள் இல்லாத நேரத்தில் இளவரசியின் வசிப்பிடத்திற்கு வரும் அரசி விஷப் பின்னற்பட்டியினை இளவரசியை அணிய வைக்க இளவரசி மயக்கமடைகிறாள். குள்ளர்கள் இளவரசியை உயிர்ப்பித்து விடுகின்றனர். இரண்டாம் முறை அரசி ஸ்னோ வைட் இளவரசியின் கூந்தலை விஷச் சீப்பினால் கோதி கொல்ல முயற்சிக்கிறாள். இரண்டாம் முறையும் குள்ளர்கள் அவளை உயிர்ப்பித்து விடுகின்றனர். மூன்றாம் முறை அரசி விஷ ஆப்பிளைக் கொடுத்து இளவரசியை சாப்பிட வைக்க அவள் நிரந்தர மயக்கத்தில் ஆழ்கிறாள். அவளை குள்ளர்களால் உயிர்ப்பிக்க இயலுவதில்லை. குள்ளர்கள் அவளை கண்ணாடி சவப்பெட்டியினுள் வைத்து பாதுகாக்கின்றனர். காட்டுக்கு வரும் இளவரசனொருவன் கண்ணாடி சவப்பெட்டிக்குள் இருக்கும் இளவரசியைப் பார்த்து அவளிடம் காதல் வயப்படுகிறான். சில கதைப் பிரதிகளில் இளவரசன் முத்தமிட்டு இளவரசியை உயிர்ப்பிக்கிறானென்றிருக்கிறது. வேறு பிரதிகளிலோ அவன் கண்ணாடி சவப் பெட்டியோடு சேர்த்து இளவரசியைத் தூக்கிச் செல்லும்போது கால் தடுக்கி கீழே விழ, தொண்டையில் சிக்கியிருக்கும் விஷ ஆப்பிள் வெளியே வந்து விட, இளவரசி உயிர் மீள்கிறாள் என்றிருக்கிறது. அவள் உயிர் மீண்டபின் இளவரசனும் ஸ்னோ வைட் இளவரசியும் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமண விழாவுக்கு வரும் அரசி பழுக்கக் காயவைக்கப்பட்ட இரும்புப் பதாகைகளை அணிந்து கொண்டு ஆட நிர்ப்பந்திக்கப்பட அவள் ஆடி ஆடியே இறந்து போகிறாள்.

Franz Jüttner Schneewittchen 1
From http://en.wikipedia.org/wiki/Snow_White
பார்த்தல்மேயின் 'Snow White' நாவலில் கதை நிகழ்காலத்தில் நடக்கிறது; கதாபாத்திரங்கள் நவீனமானவர்களாக இருக்கிறார்கள்; கதையின் முடிவு சீரான நீதியை நோக்கி நகர்வது மறுக்கப்படுகிறது. பார்த்தல்மேயின் நாவலில் ஏழு குள்ளர்களும் ஒரு வகையான நவீன கம்யூனில் ஸ்னோ வைட் பெண்ணுடன் வசிக்கிறார்கள். ஏழு குள்ளர்களுக்கிடையே எந்த விதமான ஒற்றுமையும் இல்லை; ஒருவரிடமிருந்து ஒருவர் அந்நியப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஸ்னோ வைட் இளவரசியோ, பார்த்தல்மேயின் நாவலில் மனோதத்துவமும் இலக்கிய விமர்சனமும் படித்தவளாக இருக்கிறாள். சிறு சிறு சேர்மன் மாவோ கவிதைகள் எழுதுபவளாகவும் இருக்கிறாள். ஏழு குள்ளர்களும் ஸ்னோ வைட்டும் சீன குழந்தை உணவு தயாரிப்பதில் ஈடுபட்டிருக்கின்றனர். மரபான கதையில் தூய கன்னியாக சித்தரிக்கப்படும் ஸ்னோ வைட் இளவரசி, பார்த்தல்மேயின் நாவலில் ஷவருக்கடியில் நின்று குள்ளர்களுடன் அடிக்கடி உடலுறவு கொள்கிறாள். உண்மையில் பார்த்தல்மேயின் நாவலில் கதாபாத்திரங்கள் கதாபாத்திரங்களாக உருத் திரள்வதில்லை. அவர்கள் வெறும் குரல்களாகவும் சிறு தூரிகைத் தீற்றல்களாகவும், சொல்லாடல்களாகவும் மட்டுமே இருக்கிறார்கள். பார்த்தல்மேயின் நாவலில் இளவரசனுக்குப் பெயர் பால். அவன் தன் கதாநாயக வடிவத்தை எட்டுவதே மிகுந்த சிக்கலுடையதாக இருக்கிறது; அதனால் அவன் உலகப் பயணம் கிளம்பிப் போய்விடுகிறான்.
அபத்தமான காத்திருத்தல் ஒன்றினை தன்னுடைய இருத்தலாக சுவீகரித்துக்கொண்ட ஸ்னோ வைட், பால் வருவான் என்று நிரந்திரமாகக் காத்திருக்கிறாள். காத்திருந்து காத்திருந்து அலுத்துப்போய்விடும் அவளுக்குத் தான் தவறான காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் தேவதைக் கதைகளின் காலத்தில் வாழவில்லை என்று வெகு தாமதமாகவே புரிய வருகிறது. உலகம் சுற்றி -இடையில் மடாலயம் ஒன்றினுள் சேர முயற்சி செய்து சலிப்படைந்து- நியுயார்க் நகரத்திற்குத் திரும்பி வரும் பால் ஸ்னோ வைட்டை கடுமையான கண்காணிப்பில் வைக்கிறான். மரபான கதையில் வரும் மாற்றாந்தாய் அரசி பார்த்தல்மேயின் நாவலில் ஜேன் என்ற பெண் பாத்திரமாய் வருகிறாள். ஜேன், ஸ்னோ வைட்டுக்கு வைக்கும் விஷத்தை பால் சாப்பிட்டு மரித்துப் போகிறான்.
பார்த்தல்மே நாவலின் வடிவத்தை துண்டு துண்டாக வைத்திருக்கிறார். கதை நேர்கோட்டில் சொல்லப்படுவதில்லை; எங்கெங்கெல்லமோ திசை திரும்பி ஓடுகிறது. இடையில் வாசகர்கள் கதையினால் திருப்தி அடைந்தார்களா என்ற வினா-விடை கேள்வித்தாள் வேறு இருக்கிறது. மனோத்தத்துவச் சொல்லாடல்களும், ஹைடெக்கரின் தத்துவச் சொல்லாடல்களும் தொடர்ந்து கிண்டலுக்குள்ளாக்கப்படுகின்றன. கதையா, தத்துவமா, கட்டுரையா, சீரிய வாதமா அல்லது எல்லாமே நக்கலா என்ற சந்தேகங்களை எழுப்பியபடியே பார்த்தல்மேயின் நாவல் நீள்கிறது. மனோதத்துவச் சொல்லாடல்களின் மனிதர்களை வரையறுக்கும் தன்மையினை நாவலில் பார்த்தல்மே அடிக்கும் கிண்டல்களுக்காகவே நாவலை பல முறை படிக்கலாம்.
-------------------------------------------------------------------------------
பொக்குவுக்கும் பொம்முவுக்கும் இந்த ஆண்டு பள்ளி விழாவில் நிறைய கதாபாத்திரங்கள் எனவே அவர்களை எல்லா நிகழ்ச்சிகள் முடிந்த பின்தான் நாங்கள் மேடைக்குப் பின்புறம் வந்து கூட்டிச் செல்ல முடியும் என்று அவர்களின் பொறுப்பு ஆசிரியை எங்களிடம் சொன்னார். ஐயப்பன் புராணக்கதை நடனத்தில் பொக்கு பந்தள மகாராஜன், பொம்மு ஊர்வலத்தில் வரும் யானையின் துதிக்கை. பொக்கு ஸ்னோ வைட் நாட்டிய நாடகத்தில் இளவரசன். இன்னொரு நாட்டியத்தில் பொம்மு இந்த வருடம் கிருஷ்ணன். அப்புறம் கராத்தே டெமான்ஸ்ட்றேஷன். அதன் பிறகு ஜோடி ஜோடியாய் ஆடும் வெஸ்டர்ன் டான்ஸில் இரண்டு பேருமே. எல்லாமே சிறு சிறு நிகழ்த்துதல்கள்தான், அதனால் களைப்படைந்துவிட மாட்டார்கள் என்றார் ஆசிரியை. நான் என் மனைவிக்கு ஐயப்பன் புராணக்கதையையும் ஸ்னோ வைட் கதையையும் சொல்லத் தலைப்பட்டேன்.
வேளச்சேரி பகுதியில் வசிக்கும் பஞ்சாபி மாமி பின் வரிசையிலிருந்து என் மனைவியைக் கூப்பிட்டார். அவர்கள் ஹிந்தியில் ஏதோ பேசிக்கொண்டார்கள். பேசி முடித்தவுடன் சரி ஸ்னோ வைட் கதையைச் சொல் என்றாள் என் மனைவி. ஹா எந்த இடத்தில் நிறுத்தினேன் என்று ஞாபகமில்லையே என்று நான் சொல்வதற்கும் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கும் சரியாக இருந்தது.
ஹே ஹோ!
அடிக்குறிப்புகள்
1 மேற்கண்டவாறு எழுதும்போது ஆதிவாசி சமூகங்களை பற்றி சில பொதுமைப்படுத்துதல்கள் நிகழ்ந்துவிடுகின்றன; அந்தப் பொதுமைப்படுத்தல்கள் உண்மையானவை அல்ல. இவற்றைக் களப்பணி சார்ந்த கருதுகோள்களாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்
2 Snow White  கதைச் சுருக்கம் படிக்க பார்க்க http://en.wikipedia.org/wiki/Snow_White

No comments: