Friday, April 6, 2012

பறவைகளைக் கலந்தாலோசிக்கப் புறப்பட்டது 15


Nishi tribal lightened
மிஷிங் ஆதிவாசி மூப்பர் இருவாட்சியின் அலகு சிகையில் 

பறவைகளைக் கலந்தாலோசிப்பதை பைத்தியக்காரத்தனம் என்றல்லவா நீ நினைக்கிறாய் என்றார் ரீபாங். ஹார்ன்பில் பறவைகளை கலந்தாலோசிப்பது எப்படி என்ற என் மனதின் முணுமுணுப்பு ரீபாங்குக்குக் கேட்டிருக்க வேண்டும் என்றே நினைத்தேன். சேச்சே பைத்தியக்காரத்தனம் என்றெல்லாம் நினைக்கவில்லை ஆனால் எப்படி கலந்தாலோசிப்பது என்றுதான் தெரிந்துகொள்ள ஆர்வமாயிருக்கிறேன் என்றேன். ஹார்ன்பில் பறவைகள் தமிழில் இருவாட்சி, மரத்தலையன், இருதலையன், இருதலைப் பட்சி என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன. இருவாட்சி என்ற பெயரில் மலரொன்றும் இருக்கிறது என்றாலும் இருவாட்சி என்ற பெயரே எனக்குப் பிடித்ததாக இருக்கிறது. தென்னகத்தில் குறிப்பாக கேரள வனப்பிரதேசங்களில் காணப்படும் இருவாட்சி சாம்பல் நிறத்தது; வடகிழக்கு மாநிலங்களில், கிழக்கு இமாலய மலைத் தொடர் காடுகளில் காணப்படும் இருவாட்சி மஞ்சள் வர்ண அலகுகளையும் அதன் மேல் பல நிறக் கொண்டையையும் உடைய கம்பீரமான பறவை. தென்னகத்தின் சாம்பல் இருவாட்சியைப் பற்றி சலீம் அலி எழுதியிருப்பதை எப்போதோஏனோதானோவென்று வாசித்திருக்கிறேன்; மனதில் பெயர் நிற்கும்படிக்குக்கூட இருவாட்சி என்னைக் கவரவில்லை. ஆனால் மொரூசா இருவாட்சியை கலந்தாலோசித்திருக்க வேண்டும் என ரீபாங் வலியுறுத்தியது முதல் இருவாட்சியுடன் உரையாடவும், பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் எனக்கு ஆர்வம் மிகுதியாகியிருந்தது.


ரீபங்
மோனோ ரீபாங் மேல் வரிசையில் இடமிருந்து நான்காவதாக நிற்பவர்


வடகிழக்கு மாநிலங்களின் ஆதிவாசி இனக்குழுக்களின் பறவைகளுனுடனான பரிவர்த்தனகளைப் பற்றி உண்மையில் வெளியுலகுக்கு எந்தவிதமான நல்ல அபிப்பிராயங்களும் இருக்கவில்லை. இருவாட்சி பறவையினத்தின் அழிவுக்கு நாகர்கள் உள்ளிட்ட பல ஆதிவாசி இனக்குழுக்களின் மரபான தொல் நம்பிக்கைகளும் பறவை அலகு, இறகு ஆகியவற்றினால் செய்யப்படும் மேனி, சிகை அலங்காரங்களுமே காரணம் என்ற தப்பெண்ணம் பரவலாக இருக்கிறது.  அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் தொடர்ந்து மேனி சிகை அலங்காரங்களுக்கு பறவை அலகுகளையும் இறகுகளையும் பயன்படுத்த வேண்டாம் என்று கடுமையான பிரச்சாரம் செய்வது, பிளாஸ்டிக் இருவாட்சி அலகுகளை பயன்படுத்தக் கோருவது என்றெல்லாம் பல இயக்கங்கள் வடகிழக்கு மாநிலங்கள் முழுக்க இருக்கின்றன. ரீபாங் தங்கள் இருவாட்சி பரிவர்த்தனை சம்பிரதாயங்களை வெறுமனே பறவை வேட்டை, உடல் அலங்காரம் என்று மட்டுமே வெளியுலகு புரிந்து கொள்கிறது என்று விசனப்பட்டார். பிளாஸ்டிக் இருவாட்சி அலகுகளைத் தன்னிடம் விற்க முனைந்த வட இந்திய யுவதியைத் தான் விரட்டி அடித்த கதையை மாய்ந்து மாய்ந்து சொன்னார். நான் நம்மூரில் பிளாஸ்டிக் ஸ்டிக்கர் கோலம் வாங்கி அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டு வாசலில் ஒட்டி வைப்பது, பிளாஸ்டிக் பூரண கும்பங்கள், மாவிலை தோரணங்களினால் வீடுகளை அலங்கரிப்பது போன்ற பழக்க வழக்கங்கள் எந்தப் பிரச்சாரமுமின்றி மேற்கொள்ளப்படுவது பற்றிச் சொல்லி இந்தியா முழுவதும் பண்பாட்டு கச்சடாத்தனங்களுக்குக் குறைவில்லை என்று சமாதானப்படுத்தினேன்.

ரீபாங் தமிழ் நாட்டு மரபான பறவை பரிவர்த்தனைகள் என்ன என்று மீண்டும் மீண்டும் கேட்டார். காகங்களுக்கு அன்னமிட்ட பின் சாப்பிடுவது, உணவருந்தும் காகங்களை மூதாதையர்களாகக் கருதுவது ஆகிய பழக்கங்களைப் பற்றி ரீபாங்கிடம் நான் எடுத்துச் சொன்னேன்; அவருக்கு தமிழர் பண்பாட்டின்மேல் மரியாதை ஏற்படுவது போலத் தோன்றியது. பாரதியாரின் ‘விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்தச் சிட்டுக்குருவியைப் போலே’, ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா’, ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ ஆகிய பாடல்களை ரீபாங்கிடம் என்னாலான அளவு மொழிபெயர்த்துச் சொன்னேன். ஆதி தமிழர்களின் அக புற உலகுகள் மலர்களால் ஆன அளவு பறவைகளால் ஆகியிருக்கவில்லை என்றும் அவருக்கு மேலும் சொன்னேன். ரீபாங் ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தார். மௌனம் கலைந்தபோது நீ அந்த நீலக் குவளை மலர்களை அர்த்தபூர்வமாகத்தான் கொடுத்தாயா என்றார் ரீபாங். அது தற்செயல் என்று நான் மீண்டும் விளக்கியது அவருக்கு சமாதானமாகவில்லை. இருவாட்சியின் பறத்தல் நியதியும் தற்செயல் என்பாயோ என்ற ரீபாங்கின் முகத்தில் வேதனையின் ரேகைகள் அடர்ந்திருந்தன. அதற்கு மேல் அவரை நான் தொந்திரவு செய்ய விரும்பவில்லை.

தனிப்பட்ட இனக்குழுக்களின் நம்பிக்கைகளுக்கும், மரபுகளுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் உலகளாவிய பொதுமைப்படுத்தப்பட்ட மதிப்பீடுகளுக்கும், லட்சியங்களுக்கும் எப்பொழுதும் தகறாறுகள் இருந்துகொண்டேயிருக்கின்றன.  காண்ட்டிற்கும், ஏன் ஹெகலுக்குமே தனிப்பட்ட இனக்குழுக்களின் விழுமியங்களும், வரலாறுகளும் ஒரு பொருட்டேயில்லை. பெருவரலாறுகளின் பெருங்கதையாடல்கள் எவ்வளவு தூரம் நம் சிந்தனையை ஆக்கிரமித்திருக்கின்றன என்பதும் தனி இனக்குழுக்களின் மரபுகளை நாம் எவ்வளவு சுலபமாக துச்சமாக நினைக்கிறோம் என்பதும் பல ஆதிவாசி மாந்தரீகர்களுக்கும் மூப்பர்களுக்கும் தெரிந்தே இருக்கின்றன.

நாங்கள் எங்கள் மரபுகளைப் பேணுவதற்கு ஐந்து எதிரிகள் என்று பட்டியலிட்டார் ரீபாங்; ஒன்று அரசு வளர்ச்சித் திட்டங்கள், இரண்டு கிறித்தவ மிஷெனெரிகள், மூன்று இந்து மிஷெனெரிகள், நான்கு இடது சாரிகள், ஐந்து அரசு சாரா வளர்ச்சித் திட்ட நிறுவனங்கள். ரீபாங் தன்னுடைய பட்டியலில் கிறித்தவ மிஷெனெரிகளைச்சேர்த்திருந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஏனென்றால் ரீபாங் என்னதான் மரபான மாந்தரீகர் என்றாலும் அவரும் கிறித்தவரே. கொஹிமாவிலுள்ள அமெரிக்கன் பேப்டிஸ்ட் சர்ச்சில் அவர் உருகி உருகி பிரார்த்திப்பதை நான் பார்த்திருக்கிறேன். ரீபாங் இதை முரண்பாடாகக் கருதவில்லை. தன் இன மக்கள் எல்லோரும் கிறித்தவர் என்பதால் அவரும் கிறித்தவர்; ஆனால் அவருக்குத் தன் பண்பாட்டு மரபுகளை பேணுமிடத்து கிறித்தவத்தை விட தன் மரபுகளே முக்கியம்.

——————————————————————————————————

இருவாட்சிப் பறவைகளைக் கலந்தாலோசிக்கும் முறைகளை எனக்குப் பயிற்றுவிக்க அருணாசலப் பிரதேசத்திலுள்ள அடர் கானகத்திற்கு ரீபாங்கும் பிற நண்பர்கள் அடங்கிய குழுவுடன் நானும் செல்வது என்று முடிவாயிற்று. கொஹிமாவிலிருந்து  அருணாச்சலப் பிரதேசத்திலிருந்த மியாவ் என்ற சிறு நகரை அடைந்து அங்கிருந்து கிழக்கு இமயமலைத் தொடரிலுள்ள கானகத்தினுள் சென்று இருவாட்சிகளைப் பார்த்துவர கிளம்பினோம்.

———————————————————————————————————

தொடரும்

No comments: