Friday, December 28, 2012

தேவதேவனுக்கு விருது என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்


தேவதேவனுக்கு இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருது கொடுக்கப்பட்டதால் இந்த விருதின் கௌரவம் மேலும் உயர்ந்திருப்பதாக எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.  ஜெயமோகனும் அவருடைய விஷ்ணுபுரம் விருது அமைப்பின் நண்பர்களும்  தேவதேவனுக்கு சிறப்பாக விழா எடுத்தமைக்காக என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். தேவதேவனுடைய வலைத் தளத்தில் அவருடைய கவிதைகளை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அவருடைய சமீபத்திய கவிதைகளில் பின் வரும் மூன்று கவிதைகளும் நான் குறித்து வைத்தவை.



நான் வாய் பேசத் தொடங்கியதுமே
கீழ்வானிலே உதித்த விடிவெள்ளியை
அழகுதேவதை வீனஸை
எந்த ஒரு விண்மீன் வழிகாட்டலுமின்றிக்
காணக் கிளர்ந்தவர்கள் போல்
ஓடோடியும் வந்து
எத்தனை காதலுடன்
உன் இரு கைகளாலும்
என் கைகளைப் பற்றி
உருகி நின்றாய் என் தெய்வமே!

திடீரென்று உன் கண்களிலே
ஒரு சந்தேகம், கலக்கம்.
பற்றி நின்ற ஒரு கையை மெல்ல விடுத்து
என் தோளோடு தோளாய் மெல்ல நெருங்கி
அக் கைகளால் என்னை ஆரத்தழுவியபடியே
தொட்டுத் தடவித் தட்டிக் கொடுக்கும் பாவனையில்
எனது முதுகுப் பரப்பில் எதையோ
உன் விரல்கொண்டு தேடுகிறாய்.

என் தகுதியின்மையைக்
கண்டுபிடித்துவிட்டவன் போல்
என்னைத் துயருக்குள் தள்ளிய
என் விலக்கம் கண்டு
விம்மினேன், என் தெய்வமே!

இன்று சின்னங்கள் பலப்பலவாகி
எங்கும் பரவிநிற்கும்
உன் தீண்டலும் தீண்டாமையும்
என்னைச்சுடும்
எக் குற்றங்களையும் மன்னித்துவிடும்
காதற்பெருக்கின்
அழிவிலாப் பேரனுபவமன்றோ
என் தெய்வமே!




பாரதி,
உனக்குத் தெரியாதோ இது?
மானுடனாய்ப் பிறந்தது ஒரு பிறப்பு.
தோளில் மாட்டிக் கொண்ட பூணூலால்
நம்மை அசிங்கப்படுத்திக் கொண்டது
இன்னொரு பிறப்பு.
இதிலே
எல்லோருக்கும் பூணூல் மாட்டி-
அது நடவாது என அறிந்தே-
எல்லோரையும் நீ உயர்த்துவதாய்க்
கிளம்பியதன் அடியில் இருக்கும்
கயவாளித்தனமான பசப்பு
தேவையா பாரதி?
நம்மை மற்றவர்கள் அறிந்து கொள்ளுமுன்
நம்மை நாமே அறிந்து தெளிந்திருந்தால்
எவ்வளவு நன்றாயிருக்கும்?
ஆனால் இன்று ’தர்மாவேச’த்துடன்
இந்தியர்களனைவரையும்
இந்துக்களாக்கும்
’உயர்ந்த இதயங்களி’லெல்லாம்
வெட்கமின்றி வீற்றிருக்கிறாயோ
தேசிய மகாகவி பாரதி?



மனசாட்சியற்றுத் தாழ்ந்த மக்களும்
கலைகளிலே ஜொலிக்கமுடியும் என்றால்
என்ன பொருள் தாயே?
கலைச் சித்தாந்தங்களைத் தமக்கேற்ப வளைத்து
வகுத்துக் கொள்வோம் என்பதுவா?

வெண்டாமரை மலரில்
உனக்கு முன்னே வீற்றிருக்கும்
போதிசத்துவரையா கேட்கவேண்டும்?

அன்பு
உயிர்மை
மீமிகை உணர்ச்சிப் பெருக்குக்கான
தூய்மை – இவற்றொடு
தர்மத்துடனும்
தாகத்துடனும்
துக்கத்துடனுமான
முழுவாழ்வுடன்
தொடர்பேயில்லாத கலைகளைக் குறித்துக்
கவலைப்படவும் தகுமோ, சொல்?

ரொம்ப ரொம்ப ரொம்பக் குறைவாகவே
கலைஞர்களில் கலைஞர்களை
நான் பார்த்திருக்கிறேன் தாயே,
என் வாணாளில்

No comments: