Wednesday, January 2, 2013

கற்றது கவிதைகளால் மனதிலாகும் உலகு | பகுதி 1


மீனுக்குத் தண்ணீர்
மிருகத்துக்கு
பிராண வாயு
மனிதாத்மாவுக்கோ
மனம்தான் வெளி

இடம்என்ற பிரமிளின் கவிதை 


 2012 முழுவதும் புதியவர்களும் பழையவர்களுமான பல கவிஞர்களையும் அவர்களுடைய சிறிதும் பெரிதுமான பல கவிதைகளையும் வாசித்ததால் நாம் வாழும் உலகமும் காலமும் எனக்கு பலதரப்பட்டதாக மனதிலாகியிருக்கின்றன. என்னை இவ்வாறாக வளப்படுத்தியதற்காக நவீனத் தமிழ் கவிஞர்களுக்கான நன்றி நவிலல் என இந்தக் கட்டுரையை அடையாளப்படுத்தலாம். இதில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு கவிஞரைப் பற்றியும் தனித்தனியாக எழுத உத்தேசித்திருந்தேன் ஆனால் அதற்கான கால அவகாசம் எனக்கு உடனடியாக வாய்க்கவில்லை. 2013இல் நான் அதைச் செய்யக்கூடும்.

2012ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் என நினைக்கிறேன். கணிணித் திரையின் முன்னாலேயே நெடுநேரம் உட்கார்ந்திருந்தபடியால்எண்ணற்ற வண்ணத்து LED ஒளிரும் என் அகம்என்ற வரி என் மனதில் தோன்றிக்கொண்டேயிருந்தது எங்கே படித்தேன் என்று ஞாபகமில்லை. சில நாட்கள் கழித்து நண்பரோடு பேசிக்கொண்டிருந்தபோது  எண்பதுகளிலும் தொன்னூறுகளிலும்மீட்சிபத்திரிக்கை வந்துகொண்டிருந்தபோது ஒவ்வொருமீட்சிஇதழ் கையில் கிடைக்கும்போதும் ஒரு புதிய நவீனமான உலகத்தில் ஒரு பெரிய வலுவான நீண்ட இலக்கிய பாரம்பரியம் தோளில் அழுத்த நாம் வாழ்கிறோம் என்ற உணர்வு உடனடியாகத் தொற்றும் என்றேன். அந்த உரையாடலின்போதுஉமை முலை அவர் பாகம், இருளாய கரையில், அருளாகும் நின் தேகம், எண்ணற்ற வண்ணத்து LED ஒளிரும் என் அகம்என்று நான் மனனம் செய்து வைத்திருந்த பிரம்மராஜனின் கவிதை வரிகள் உடனடியாக நினைவுக்கு வந்து விட்டன

பிரம்மராஜனின்கடல் பற்றிய கவிதைகள்தமிழ் கவிதை மரபில் பின் நவீனத்துவ உலகப் பார்வையினை கவிதைகளாகவே முன் வைத்த முன்னோடிக் கவிதைகள்எவ்வளவு பெரிய உலகை அவை எனக்கு காண்பித்துத்தந்திருக்கின்றன! இசை, ஓவியம், நடனம், சினிமா, பழந்தமிழ் இலக்கியம், நவீன உலக இலக்கியம், இலக்கியக் கோட்பாடு எனத் தமிழ் இலக்கிய வாசகனின் மனதினை கவிதைகளாலேயே அகலப்படுத்தியவர் பிரம்மராஜன். 2012இல் நான் பிரம்மராஜனை மீண்டும் மீண்டும் வாசித்தேன். கவிதைகளை மனனம் செய்து படிக்கும் பழக்கமுள்ளவனாகையால் அவரது கவிதைகளை மீண்டும் மனனம் செய்து எச்சூழலில் எவ்வாறாக அவை என் மனதில் எழுகின்றன என கவனித்தேன். ‘கடல் பற்றிய கவிதைகள்வெளிவந்த புதிதில் பிரம்மராஜனின்கடலும் மகளும்என்ற கவிதையின் இறுதி வரிகளானஅவ்வளவு அழகாயில்லாத, இந்தக் கரையிலும் கடல் கற்போம்எனக்கு  பிரும்மாண்டத்தினையும் அழகும் அசிங்கமும் பல தரப்பட்டவைகளும் ஏற்ற தாழ்வின்றி கலக்கும் மொசைக்கினை எனக்குச் சுட்டியதென்றால் மீள் வாசிப்பில்கடல் இடை மலைகள்கவிதையின் லயம் என்னை ஆட்கொண்டுவிட்டது. (அந்தக் கவிதையையும்  இதர கவிதைகளையும்  பிரம்மராஜனின் தளத்தில் நீங்கள் வாசிக்கலாம் http://brammarajan.wordpress.com/2008/12/06/கடல்-பற்றிய-கவிதைகள்-பிர/)

 பிரம்மராஜனின் கவிதைகளைத் தொடர்ந்து பயில்வதால் கிடைக்கும் வாசக அக லயம் அபூர்வமானது. அதை ஒரு வகையான சம ஒழுங்கின் சட்டகம் எனச் சொல்லலாம். “ அருளாகும் நின் தேகம். எண்ணற்ற வண்ணத்து LED ஒளிரும் அகம்என்ற வரியில் Light Emitting Diode என்பதன் சுருக்கமான LED தன் அந்நியத்தன்மை இழந்து இயல்பாக வரியினுள் இயைவதைப் பாருங்கள். இந்த மாதிரியான இயைபுகள் பல காணப்படுவது பிரம்மராஜன் கவிதைகளின் தனித்துவ குணாதிசயமாயிருக்கிறது. இதை வேறு எவரும் பின்பற்ற முடியுமா என்றும் தெரியவில்லை. மூர்க்கமாகத் தூய்மையை மொழியில் கொண்டாடுகிற பலருக்கு பிரம்மராஜனின் சாதனை பிடிபடுவதில்லை. டி.எஸ்.எலியட்டும், எஸ்ரா பவுண்டும் ஆழமாக உள் இறங்கியதால் பிரம்மராஜன் வழி தமிழுக்குக் கிடைத்த புதிய அழகுகள் அவை. அந்த அழகுகள் நாம் வாழும் காலத்தின் அழகுகளும் கூட. LED என்ற சுருக்கம் தன் அந்நியத்தன்மை இழக்கிறதென்றால்உமை முலை அவர் பாகம்என்ற மரபின் சித்தரிப்பு தன் மரபுத்தன்மையினை இழந்து LED இக்கு நிகரான சமகாலத்தன்மை பெறுகிறது. இங்கே இப்போது என ஒரு லயம் ஒளிரும் அகம் வாசகனுக்கு அனுபவமாகிறது. மரபின் வெளிப்பாடுகள் இனிமேலும் சுமைகளாக இருக்கப்போவதில்லை. உலகளாவிய வளர்ச்சியின் பயன்பாடுகள் ஐயத்துடன் அந்நியமாய் பார்க்கப்படவேண்டியதில்லை. பூட்டிய வீட்டிற்குள்ளிருந்து சாளரங்களைத் திறந்து எட்டிப்பார்த்துவிட்டு மீண்டும் இறுக்கப் பூட்டிக்கொண்டு உட்கார்ந்துவிடும் காரியமல்ல. இது உண்மையில் வீடு துறந்து கடல் அறிதலும் கடல் கற்பதும் ஆகும்

-------------------------------------------------------------------

ஆனால் நாமிருக்கும் வீடும் சிறிய வீடா, என்ன? கடலெனவே விசாலம் பெறும் வாசக மனத்திற்கு இதனால் கிடைக்கப்பெறும் முதன்மையான பயன்பாடு என்னவென்றால் நம் வீட்டு மரபின் கலை வெளிப்பாடுகள் தொன்மையின் புனிதத்தினால் அல்ல அவை சமகால வாழ்வுக்கு அளிக்கும் நவீன கொடைகளாக இயைபு பெறுவதே ஆகும். இந்த இயைபு காலமழிந்த தொடர்ச்சியாக பல சமயங்களிலும் உள்ளார்ந்த அக ஏந்துதலாக வேறு பல சமயங்களிலும் அர்த்தமாகிறது.

இந்த நம் வீட்டு மரபின் அக ஏந்துதலுக்கான வாசல்களை முதலில்  திறந்தவர் பாரதி அல்லவா? பாரதியின் 

காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா


 என்ற கவிதை மீட்டி சுருதி சேர்த்துவிட்ட இருதயத்தின் நரம்புகளுக்கு தெய்வத்தையும், காமத்தையும்  ஏந்தி வருகின்ற சங்கத் தொகை நூலான, பரிபாடலிலே திருமாலைப் பற்றிப் பாடும் கடுவன் இளவெயினாரின் கடவுள் வாழ்த்தான 

நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள;
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள;
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள;
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள;
அதனால், இவ்வும், உவ்வும், அவ்வும், பிறவும்,
ஏமம் ஆர்த்த நிற் பிரிந்து,
மேவல் சான்றன, எல்லாம்.
என்ற பாடலும்,
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்ற
என்ற நம்மாழ்வார் பாசுர வரிகளும் சமகாலத்ததாகவும் ஒரே கவிதா அழகியலைக் கொண்டதாகவும் அணுக்கம் பெறவில்லையாஇப்பாடல்களுக்கிடையே இருக்கின்ற ஆயிரமாயிரம் ஆண்டுகளின் இடைவெளி நனவின் நுனி தொடாமல் காணாமல் போகவில்லையா?
 -------------------------------------------------------------------------------

2012 இல் அதிகமும் பலர் எழுதிய கட்டுரைகளில் மேற்கோள் காட்டப்பட்ட பிரமிளின் கவிதை 

காவியம் 

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று 
காற்றின் 
தீராத பக்கங்களில்
ஓரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

இக்கவிதை 2012 முழுவதும் எனக்கு பறவையின் வாழ்வினை காவியமாக சிறகிலிருந்து தனித்துப் பிரிந்த இறகுதான் எழுதுமா? ஞானக்கூத்தனின் கவிதையில் ஒரு கூடைச் செங்கலிலே சரிகின்ற ஒற்றைச் செங்கல் போன்ற தனித்துவமிக்க இறகா அது அல்லது சிறகிலுள்ள அத்தனை இறகுகளுமே காற்றில் பறக்க நேரிட்டால்  காவியத்தினை எழுதிவிடுமா அல்லது ஓவ்வொரு இறகும் ஒவ்வொரு காவியத்தினை எழுதுமா? காற்றின் பக்கங்கள்தான் தீராமலிருக்கின்றனவே  என்ற கேள்விகளை எழுப்பியபடி இருந்தது

இல்லை பறவையின் பகுதி, விட்டுச் சென்ற மிச்சம் என்ற வகையில் திருவள்ளுவர் போதித்தஅவரவர் 
எச்சத்தாற் காணப் படுகின்ற விவகாரமா? இறகுகளால் மீள் உருவாக்கம் பெறுகின்ற பறவையின் வாழ்வினைப் பற்றிய அதன் சரித்திரத்தைப் பற்றிய -அது காவியமா இல்லையா என்பது அல்ல பிரச்சினை- மிக அதிகமான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ள வருடம் 2012: திராவிட இயக்கம் என்ற மக்கள் இயக்கம் ஒன்று தமிழகத்தில் நடந்ததா இல்லை புனைவா? ஶ்ரீராமானுஜர் சாதி எதிர்ப்புக்காக போராடினாரா இல்லையா? தந்தை பெரியார் தலீத் மக்களுக்காகவும் போராடினாரா இல்லையா? வைகுண்டசாமியின் தோள்ச்சீலை எதிர்ப்புப் போராட்டம் சாதிகளுக்கிடையிலான போராட்டமா இல்லையாஇலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப்படை அங்கே கற்பழிப்பில் ஈடுபட்டதா இல்லையா? இறகு பறவையின் வாழ்வை உண்மையாக எழுதுமா அல்லது காற்றடிக்கும் திசைக்கேற்ப எழுதப்பட்ட பறவையின் வாழ்வுதான் நம் கண்ணில் சிக்குமா? தன் கண்ணில் சிக்கிய காற்றின் வரைதல்தான் பறவையின் காவிய வாழ்வு என ஒருவர் சாதிப்பாரேயானால் நாம் என்ன செய்ய முடியும்? பறவை ஏதேனும் இருந்ததா? அது பறந்ததா? அதன் சிறகிலிருந்து ஏதேனும் இறகு பிரிந்ததா?

புனைவுகளாலும் எதிர் புனைவுகளாலும் மட்டுமே ஆளப்பட்ட ஈழத்துத் தமிழ் போர்ச் சூழலும் போருக்குப் பின் வாய்த்த சூழலும் றியாஸ் குரானாவுக்கு பிரமிளின் கவிதையில் உள்ள இறகை விடுத்து   பறவையை கவனிக்கும் ஆற்றலை அவருக்குத் தந்துள்ளது. றியாஸ் குரானாவின் பின் வரும் கவிதையினைப் படியுங்கள்:



அதிகம் பாவிக்கப்பட்ட பறவை 


இது அதிகம் பாவிக்கப்பட்ட ஒரு பறவை
இன்னும் பழுதடைந்துவிடாமல்
நல்ல நிலையில்தான் உள்ளது
பல வருடங்களாக
திரும்பத் திரும்ப வரையப்பட்டபோதிலும்
ஒரு இறகும் தொலைந்துவிடவில்லை
நாம் இமைக்கும் ஒவ்வொரு முறையும்
வர்ணங்களை மாற்றிக் காண்பிக்கும்
இந்தப் பறவை;
தினமும் அதிகாலையில்
சித்திரத்திலிருந்து வெளியில் சென்றுவிடுகிறது
அந்த நேரத்தில்தான்
சித்திரத்தில் திருத்த வேலைகள் செய்யமுடியும்
இரவில்,சித்திரத்திலுள்ள
வர்ணங்களையெல்லாம் தின்றுவிடுகிறது
இப்படித்தான் அன்றொரு நாள்
ஒரு அழகிய பாடலை எழுதிவைத்தேன்
கண்முன்னே சொற்களை
கொத்தித் தின்றேவிட்டது
இலக்கியங்களும்
ஓவியங்களும்
மிக அதிகம் பாவித்த இந்தப் பறவை
இன்னும் பழுதடைந்துவிடாமல்
நல்ல நிலையில்தான் உள்ளது
பெரும்பாலும்
அந்தப் பறவை எதுவென்று
இப்போது ஊகித்திருப்பீர்கள்
இல்லையெனில்; இனியும் ஊகிப்பதற்கான
அவகாசம் உங்களுக்கில்லை
வாசிப்பதை நிறுத்திவிட்டு
தயவு செய்து போய்விடுங்கள்
இது, ஓய்வெடுப்பதற்காக அந்தப் பறவை
கவிதைக்குள் வருகின்ற நேரம்
றியாஸ் குரானாவின் ஒவ்வொரு கவிதையும்  கவித்துவம், வரலாறு, என்றெல்லாம் கட்டமைக்கப்படுவதிலுள்ள புனைவுகளின் உள்ளலகுகளை  மீண்டும் மீண்டும் அவிழ்த்துச் சொல்கிறதுபுனைவுகளின் மிகையுணர்ச்சிகளிலோ அவற்றின் கயமைத்தனமான பசப்புகளிலோ மயங்கிவிடாமல் என் அகத்தின் நனவு நிலையை தக்க வைத்தவர் றியாஸ் குரானா. நான் நம்பும் கவிக்குரல்களில் தனித்துவம் மிக்க கவிக்குரல் றியாஸ் குரானாவுடையது.
------------------------------------------------------------
பொதுவாகவே புனைகதையாளர்களையும் தத்துவவாதிகளையும் சரித்திர ஆசிரியர்களையும் அரசியல்வாதிகளையும் விட கவிஞர்களையும் அவர்களின் கவிக்குரல்களையும் நாம் நம்பலாம்திராவிடத் தமிழ்க் கவிஞர் என்று தன்னைத்தானே தொடர்ந்து அடையாளப்படுத்திக் கொள்ளும் விக்கிரமாதித்யன் நம்பி 
சோறு சோறு என்று சொல்லுவான் திராவிடன்
சாதம் சாதம் என்று சொல்லுவான் ஆரியன்
பசி பசி என்று பரிதவிக்கிறது மானுடம்
என்ற மூன்றே வரிக் கவிதையின்  மூலம் திராவிட ஆரிய அரசியலின் அபத்த எல்லை என்ன என்பதைச் சுட்டவில்லையா
-------------------------------------------------------------------
 தொடரும் 






1பிரமிள் கவிதைகள்பதிப்பு கால சுப்பிரமணியம் அடையாளம் வெளியீடு 2007 பக்கம் 318
2 றியாஸ் குரானா, “நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்புபுது எழுத்து வெளியீடு பக்கம் 10 

No comments: