Monday, June 17, 2013

காஃப்கா தன் தந்தைக்கு எழுதிய கடிதம் | தத்துவம்

ஃபிரான்ஸ் காஃப்கா 





ஃப்ரான்ஸ் காஃப்கா தன் தந்தைக்கு 1919 ஆண்டு எழுதிய கடிதம் ஆங்கிலத்தில் 1966 ஆம் ஆண்டு எர்ன்ஸ்ட் கைசர், எய்தின் வில்கின்ஸ் ஆகியோரால் மொழிபெயர்க்கப்பட்டது; 2008 ஆம் ஆண்டு ஹான்னா ஸ்டோக்ஸ் மற்றும் ரிச்சர்ட் ஸ்டோக்ஸ் ஆகியோரால் செய்யப்பட்ட புதிய மொழிபெயர்ப்பு Oneworld Classics பதிப்பகத்தினரால் Dearest Father என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. 1966 ஆம் ஆண்டு மொழிபெயர்ப்பு இணையத்தில் முழுமையாக   https://docs.google.com/document/d/1CK480j6khmHzAZYdR26Zu1Iu064uCo32JnESIulbFYw/preview  என்ற சுட்டியில் வாசிக்கக் கிடைக்கிறது,

-------------------------------------

காஃப்கா தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தை நேரடியாக தன் தந்தையிடம் கொடுக்கவில்லை. தன் நண்பரான மேக்ஸ் பிராட்-இடம் கொடுக்க அவர் காஃப்காவின் தாயாரிடம் கொடுத்தார். தாயார் காஃப்காவின் தந்தையிடம் அந்தக் கடிதத்தை கொடுக்கவேயில்லை. யாருக்கு எழுதப்பட்டதோ அவருக்குப் போய் சேராத கடிதம் நவீன மேற்கத்திய இலக்கியத்தின் முக்கியமான கிளாசிக்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. தத்துவத்திலும் இலக்கிய விமர்சனத்திலும் முக்கியமான சிந்தனைகளுக்கு  காஃப்காவின் கடிதம் அடிகோலியிருக்கிறது. லியோடார்ட் அவருடைய ‘Differend’ என்ற சொல்லாமுடியாதவற்றை சொல்லுதல், அடையாளப்படுத்துதல் என்ற கருத்தாக்கத்தினை காஃப்கா தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தை வாசிப்பதிலிருந்தே உருவாக்குகிறார். மேற்கத்திய உலகில் தந்தை-மகன் உறவு குறியீட்டுதளத்தில் விவாதிக்கப்படுவதற்கான அடித்தளம் உளப்பகுப்பாய்வில் கிரேக்க புராணங்களிருந்து பெறப்பட்டதென்றால், அதன் வாழ்வியல் வியாகூலங்கள் காப்ஃகாவின் கதைகளிலிருந்தே தெரியவருகின்றன. காஃப்காவின் கதைகளுக்கு அவர் தன் தந்தைக்கு எழுதிய கடிதம் ஒரு திறவுகோல். காஃப்காவின் படைப்புகள் சட்டம், நீதி ஆகியன நம் காலத்தில் அடைந்துள்ள அபத்த பரிமாணங்களை முதுகுத்தண்டு சில்லிடும் வகையில் சுட்டுகின்றன. சட்டம், நீதி, அரசு ஆகியன பற்றிய காஃப்காவின் சிந்தனைகளும் கலைவெளிப்பாடுகளும் தன் தந்தையை அதிகாரபீடத்தின் குறியீடாக நிறுத்தி அந்த பீடத்திலிருந்து எந்த அங்கீகாரத்தையும் பெறமுடியாத கைவிடப்பட்ட நிலையிலிருந்தே உருவாகியிருக்க வேண்டும் என்று கருத இடமிருக்கிறது. 

காஃப்காவின் கடிதம் தான் ஏன் தன் தந்தைக்குப் பயப்படுபவராகவே இருக்கிறார் என்று விளக்கம் சொல்வதில் ஆரம்பிக்கிறது. அதீத நுண்ணுணர்வும் வாசிப்பு மோகமும் தனிமையுணர்வும் நோஞ்சானான உடலுமைப்பும் நோய்களும் உடைய மகன். தந்தை ஹெர்மன் காஃப்காவோ ஆஜானபாகுவான உடலமைப்பும் வியாபார லௌகீகமும் விஷக்கொடுக்கு நாவும் கூரிய அங்கதமும் கேலியான சிரிப்பும் கொண்டவர். மகன் காஃப்காவால் சாப்பாடு மேஜையில் கூட அப்பாவின் வேகத்துக்கும் மேஜை நாகரீக எதிர்பார்ப்பிற்கும் ஏற்ப நடந்துகொள்ள முடிவதில்லை. அப்பாவின் ஆஜானுபாகு உடலின் கம்பீரத்தை ரசிக்கவும் ஆராதிக்கவும் கூடியவராகவே இருக்கிறார் மகன் காஃப்கா. புத்தகப்புழுவாய் அப்பாவின் எதிர்பார்ப்புகள் எதையும் நிறைவேற்றாமல் இருக்கும் மகன் தன்னிடம் நன்றியறிதலையாவது காட்டவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அப்பா காஃப்காவுக்கு இருக்கிறது; ஆனால் அதைக் கூட தன்னால் தரமுடியவில்லை என்று எழுதுகிறார் மகன். மகனுக்கு மேக்ஸ் ப்ராட் போன்ற விசித்திர நண்பர்கள். வீட்டில், அப்பாவின் வியாபார ஸ்தலத்தில், குடும்பத்தோடு நேரம் செலவழிக்கும் பொது இடங்களில், யூத வழிபாட்டுத்தளங்களில் என எல்லா இடங்களிலும் அந்நியமானவராக இருக்கிறார் மகன் காஃப்கா. மகனின் இரண்டு திருமணங்களும் வேறு தோல்வியில் முடிகின்றன. பலகீனன், நோயாளி, நோஞ்சான், நுண்ணுணர்வு மிக்க தனியன் என முற்றிலும் தோல்வியடைந்த கதாபாத்திரமாகவே காஃப்கா தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் வெளிப்படுகிறார். தந்தை சட்டங்களையும் விதிகளையும் ஏற்படுத்தி அவற்றை செயல்படுத்துகிண்ற லௌகீகி. அவர் நடத்துகிற வியாபார ஸ்தலத்தில் அவர் தன் வேலையாட்களை கொடூரமாக நடத்துகிறார். சங்கோஜியான மகன் தன் தந்தையின் அலுவலகத்திற்கு செல்லும்போதெல்லாம் தன் அப்பாவின் நடத்தைக்கு பிராயசித்தம் செய்பவராக, அவருடைய தவறுகளுக்கு ஈடு செய்பவராக வேலையாட்களிடம் அதிக பணிவுடனும் மரியாதையுடனும் நடந்து கொள்பவராக தன் கடிதத்தில் குறிப்பிடுகிறார். தன் அம்மாவுக்கு தன் தந்தையின் மேல் இருக்கிற அபரிதமான காதல், மகனின் நுண்ணுணர்வுகளை அங்கீகரித்தாலும் அப்பாவிடம் அவற்றை எடுத்துச் செல்லும் அளவுக்கு போகவிடாமல் தடுப்பத்தையும் காஃப்கா பூடகமாக சொல்லத் தவறவில்லை. அப்பாவை முழுமமையான ‘Kafka material’ என்று குறிப்பிடும் மகன் காஃப்கா தன் சகோதரிகளிடையே யாரிடமெல்லாம் காஃப்கா குணங்கள் நிறைந்திருக்கின்றன யாரிடம் தன்னைப் போல நுன்ணுணர்வு மிகுந்திருக்கின்றன   என்றும் சொல்கிறார். 

தான் மிகவும் வியக்கும், ஆராதிக்கும், தான் சில பல திருத்தங்களுடன் ஆக விரும்பும் தந்தை தன்னை பாராட்டமாட்டாரா, அங்கீகரிக்க மாட்டாரா என்ற ஏக்கமும் காஃப்காவின் கடிதத்தில் அடிநாதமாய் ஓடிக்கொண்டேயிருக்கிறது. நோயாளிப்படுக்கையில் படுத்திருக்கும் மகன் காஃப்காவை வெளியூர் சென்று திரும்பி வரும் அப்பா காஃப்கா அறைக்குள் எட்டிப் பார்த்து கையசைப்பது போன்ற சின்ன விஷயங்கள் கூட மகனை மிகவும் சந்தோஷப்படுத்துகிறது. தன்னை தோல்வியுற்றவனாகவே பார்க்கும் தன் தந்தையிடம் ஏதேனும் ஒரு பாராட்டுக்கு ஏங்கி அது கிடைக்காததாலேயே அப்பாவை, அப்பா பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்தைப் பார்த்து அஞ்சக்கூடியவராய் இருக்கிறார் மகன் காஃப்கா.

1950களில் நியுயார்க நகரின் கிரீன்விச் கிராமத்தின் மனப்பதிவுகளை எழுதிய இலக்கிய விமர்சகர் அனடோல் ப்ரயோர்ட் காஃப்கா எவ்வளவு புகழ் பெற்றவராக இருந்தார் என்று எழுதியிருக்கிறார். ராபர்ட் கிரம்ப் என்ற ஓவியர் காஃப்காவின் வாழ்க்கையை ஓவியமாகத் தீட்டிக்கொண்டு வந்த புத்தகம், சோடர்பெர்க் 1992 இலும், ஜோன்ஸ் 1993 இலும், கபால்டி 1995 இலும்  காப்ஃகாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்த திரைப்படங்கள், அவருடைய ‘உருமாற்றம்’ கதை நாடகங்களாக செல்வாக்கோடு இருப்பது, ஃபிலிப் கிளாஸ் உருவாக்கிய ‘In the penal colony’ என்ற இசை நாடகம் என காப்ஃகாவின் தாக்கம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் முதல் ஹருகி முராகமி வரை அனைத்து உலக படைப்பாளிகளும் தங்கள் படைப்புகளில் காப்ஃகாவின் செல்வாக்கினை பெருமையுடன் ஒத்துக்கொள்கின்றனர்.

தமிழில் சுந்தரராமசாமிக்கு காஃப்காவின் படைப்புகளின் மேல் பெரிய பிரமிப்பு இருந்தது. மேக்ஸ் பிராட் காப்ஃகாவின் மறைவுக்குப் பின் கொண்டு வந்த தொகுப்பிலிருந்து குட்டிக் கதைகளை மட்டுமாவது ஆளுக்கொரு கதை என தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் மொழிபெயர்த்துக் கொண்டுவர வேண்டும் என்று சுந்தரராமசாமி தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருந்தார். கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்து தமிழில் வெளிவந்த காப்ஃகாவின் ‘விசாரணை’ அதனுடைய விசித்திர தமிழால் யாரையும் சரியாக சென்றடையாமல் போய்விட்டது. நிற்க. காப்ஃகாவுக்கும் அவர் தந்தைக்கும் இடையிலான சிக்கலான அன்பும் வெறுப்பும் கலந்த உறவு சுந்தரராமசாமிக்கு  அவருக்கும் அவருடைய தந்தைக்கும் இருந்த உறவைச் சொல்வதாக இருந்திருக்க வேண்டும். இந்த ஒத்த அடையாளங்களின் ஈர்ப்பு தந்தையிடமிருந்து அதாவது மரபுகளிடமிருந்து விடுபட்ட நவீனத்துவத்தை நோக்கி சுந்தரராமசாமியை நகர்த்தியிருக்க வேண்டும்.

ஏனெனில் தந்தையுடனான மகனின் உறவு என்பது பௌதீக தந்தையுடனான உறவு மட்டுமல்ல; அது மரபு, அரசு, குரு, அதிகார பீடம், விதி, தேசம், சட்டம் ஆகியவற்றோடு ஒருவன் கொள்கிற உறவின் தன்மையினையும் சொல்லக்கூடியது. ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வு தந்தையைக் கொன்று தன் ஸ்தானத்தையும் தனக்கான பெண்ணையும் பெறுகின்ற ஆதிகதையின் குறியீட்டுத்தன்மையினை உளவியல் சிக்கல்களுக்கு விளக்கமளிக்கும் கதையாகக்கொண்டிருக்கிறது. கிரேக்க புராணமான ஈடிப்பஸ் கதையை மைய உருவகமாகக் கொள்ளும் ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வு மரபுகளையும் வரலாற்றையும் வளரும் மகன்கள் தங்கள் தந்தைகளை அழித்து தம்மிடத்தை நிறுவிக்கொள்ளுதலின்  தொடர்ச்சியான செயல்பாடுகளாக விவரிக்கிறது. இவ்வாறான குறியீட்டு தந்தைக்கும் மகனுக்குமான உறவு இந்தியாவில் எப்படி இருக்கிறது என்பதை ஏ,கே.ராமனுஜன் ‘இந்திய ஈடிப்பஸ்’ என்ற கட்டுரையில் எழுதியிருக்கிறார். ராமனுஜனின் வாதம் என்னவென்றால் இந்திய ஈடிப்பஸ் தன் மேற்கத்திய சக ஈடிப்பஸை போல தன் தந்தையைக் கொல்வதில்லை; மாறாக தந்தைக்கு அடிபணிந்து போய்விடுவான் என்பதாகும். யயாதி, பீஷ்மர், ஆகிய புராண இதிகாச கதாபாத்திரங்களை வைத்து ‘இந்திய ஈடிப்பசை’ விளக்கும் ராமானுஜன் இந்தியக் கலைஞர்கள்/எழுத்தாளர்கள் அதிகாரத்திற்கு, குரு பீடங்களுக்கு, மரபுகளின் செல்வாக்குகளுக்கு அடிபணிந்து செல்லக்கூடியவர்களாகவே இருப்பார்கள் என்றும் சொல்கிறார் என்று நாம் வாசிக்கவேண்டும். மரபுகளின் அதிகார மதிப்பீடுகளை தூக்கியெறிந்து விட்டு புத்தம்புதிய உலகினை படைப்பதற்கான வலுவும் தீவிரமும் துணிச்சலும் சுய அடையாளங்களுக்கான வேட்கையும் இல்லாதவர்களே இந்தியக் கலைஞர்களும் எழுத்தாளர்களும் என்றும் ராமனுஜனின் கட்டுரையை நாம் வாசிக்கலாம்.

அதிகார பீடங்களையும், புகழையும், லௌகீக வெற்றிகளையும் நோக்கி நகரக்கூடியவன், அந்த நகர்வுகளுக்காகத் தன்னை தகுதிப்படுத்திக்கொள்பவன் எப்படி அதே அதிகாரங்களின் உள் கட்டமைப்புகளை விமர்சிக்க இயலும்? அந்த அதிகாரக் கட்டமைப்புகளின் அபத்தங்களை காண இயலும்? தன் தந்தையின் மதிப்பீடுகளிலிருந்து அந்நியமானவராக இருந்த காஃப்காவால்தான் நம் காலத்தின் அமைப்புகளிடமிருந்து முற்றிலுமாக அந்நியமானவனாக வெளியாளாக இருந்து அவற்றின் பயங்கரங்களைக் கலையாக்க முடிந்தது.

அநீதியை எதிர்த்து போராடுகிற தட்டையான தமிழ் சினிமா பாப்புலர் கதநாயகனைப் போல யாரையும் காப்ஃகா படைக்கவில்லை. காஃப்காவின் கலை உருவாக்கும் உலகில் அநீதி எதிர்க்கப்படாமல் போவது மட்டுமல்ல, அநீதியான உலகே ‘இயல்பானது’ என்றும் ஏற்றுகொள்ளப்படுகிறது. உதாரணத்திற்கு காஃப்காவின் ‘நிராகரிப்பு’ (Refusal)  என்ற சிறுகதையை எடுத்துக்கொள்ளுங்கள். சிறு நகரம் ஒன்றில் தங்களுக்கான உரிமைகளையும் வசதிகளையும் கேட்டு போராடும் மக்கள் அந்த சிறு நகரத்தின் சிறு அதிகாரி அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்தவுடன் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். ‘விசாரணை’ நாவலில் இறுதியில் இந்த மனப்பாங்கு இன்னும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்கிறது; நாவலின் மைய கதாபாத்திரம் தன்னைக் கொல்லவிருக்கும் அரசுகொலையாளிகளை தண்டனை கூடத்திற்கு தானே கூட்டிச் செல்கிறான்.

காப்ஃகாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவருடைய தந்தைக்கு இருந்த இடம் காப்ஃகாவின் கதைகளில் சட்டத்திற்கு கொடுக்கப்படுகிறது. வழக்கறிஞராக தொழில் புரிந்த காஃப்கா தான் படித்த சட்டக் கல்லூரிகளை கடுமையாக வெறுத்தார்; அவை அர்த்தமற்றவை என்று எழுதினார், நம் மனு நீதி போன்ற ரோமானிய சட்டத்தை காஃப்கா வெறுத்ததில் ஆச்சரியமொன்றுமில்லை. வழக்கறிஞராக வேலைபார்த்த காஃப்காவுக்கு தொழிற்சாலைகளின் பாதுகாப்பு வசதிகளை பார்வையிடும் பணியும் பகுதி நேர வேலையாக வாய்த்தது. மேக்ஸ் ப்ராடுக்கு எழுதிய கடிதமொன்றில் காப்ஃகா என்னனென்ன ஆச்சரியமான அபத்தங்களினால்   தொழிற்சாலைகளில் விபத்துகள் ஏற்படுகின்றன என்று ஆயாசப்பட்டு எழுதுகிறார்; அதே விபரங்கள் அவருடைய ‘In the penal colony’ சிறு கதையிலும் காணக்கிடைக்கின்றன. அதனால்தான் காஃப்காவின் ‘விசாரணை’ நாவல் அதீத கற்பனையல்ல யதார்த்தமே என்று சில விமர்சகர்கள் எழுதும்போது நமக்கு அடிவயிறு அதிர்ச்சியில் உறைகிறது.

காப்ஃகா தன் தந்தைக்கு எழுதிய கடிதம் எப்படி அவர் தந்தையைச் சென்றடையவில்லையோ அது போலவே ‘விசாரணை’ ‘கோட்டை’ நாவல்களில் வரும் மைய கதாபாத்திரமான ஜோசஃப் கே தன் விதியினை முடிவு செய்யும் நீதிபதியினை நாவல்களின் இறுதி வரை சந்திப்பதேயில்லை. ‘நம் சட்டத்தின் பிரச்சனைகள்’ சிறுகதையிலோ சட்டவிதிகள் எவ்வளவு ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றனவென்றால் சட்டவிதிகள் என்று உண்மையிலேயே ஏதும் இருக்கின்றனவா என்று சந்தேகம் வரும் அளவுக்கு அவை ரகசியமாக வைக்கப்ப்ட்டிருக்கின்றன. கொடும் கனவெனவே ஒரு சமூகம் நம் கண் முன்னால் காஃப்காவின் படைப்புகளில் விரிகிறது; என்ன, அவை கனவுகளல்ல யதார்த்தங்கள்.

‘விசாரணை’ நாவலில் ஒரு பெரிய வங்கியில் அதிகாரியாக இருக்கும் ஜோசஃப் கே கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கடைசியில் கொலைத்தண்டனை வழங்கப்படுகிறான். அவன் என்ன குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறான், அவனை விசாரிக்கும் சட்டத்தின் நீதியின் அடையாளம் என்ன என்பது அவனுக்கு கடைசி வரை தெரிவதில்லை. கே யை கைது செய்யும் அதிகாரிகள் அவனுடைய விலையுயர்ந்த ஆடைகளை அவனிடமிருந்து கவர்ந்து விடுகின்றனர். அவன் என்ன காரணம் என்று அறியாமலேயே கைது செய்யப்பட்டிருந்தாலும் அவனை குற்றமுடைய நெஞ்சுடையவனாய் அவனை நடத்தும் விதத்திலேயே மாற்றிவிடுகின்றனர். கேயை கைது செய்திருப்பதாக அறிவிக்கும் அதிகாரி அவன் தொடர்ந்து அவன் தொழிலை செய்யலாம் என்றும் அறிவிக்கிறார். ஒரு நாள் திடீரென்று கே யின் வழக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு அபார்ட்மெண்டில் நடக்கும் என்று ஃபோன் மூலம் சொல்லப்படுகிறது. கேயினால் எந்த அபார்ட்மெண்ட் என்று கண்டுபிடிக்க இயலுவதில்லை. அவன் வழி கேட்க வெட்கப்பட்டு அந்த அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் தச்சன் ஒருவனை பார்க்க வேண்டும் என்று சொல்லி வழி கேட்கிறான். அவனுக்கு நீதிமன்றம் இயங்கும் அபார்ட்மெண்ட்டிற்கு வழி தெரிந்துவிடுகிறது!. அவனுக்கு எந்த நேரம் தன் விசாரணை என்று தெரியாது. ஏதோ வந்து சேர்ந்துவிட்டதால் அவனை நீதிபதி இல்லாமலேயே விசாரிக்கின்றனர். கே வீட்டுக்கு பெயிண்ட் அடிப்பவனா என்று வினவுகின்றனர்; அவன் தான் பெரிய வங்கியொன்றின் அதிகாரி என்று பதிலளிக்கிறான்.

எல்லாமே பூடகமாகவும் ரகசியமாகவும் இருக்கிறது. தன் தந்தையினையும், மரபுகளையும் சட்டங்களையும் கே தேர்ந்தெடுக்கவில்லை அவனுக்கு எதுவும் தெரியவும் இல்லை ஆனால் அவன் அந்த நீதிபதிகளோ நீதியோ இல்லாத வழக்காடுமன்றங்களுக்கு போக வர இருக்கிறான். 

காஃப்காவின் ‘சட்டத்தின் முன்னால்‘ என்ற சிறுகதை இன்னும் விசித்திரமானது. சட்டத்தின் வாயிலில் நின்று கிராமத்தான் ஒருவன் உள்ளே நுழைய அனுமதி கேட்கிறான். இப்போது முடியாது. நீ காத்திருக்க வேண்டும் என்கிறான் வாயிற்காப்போன். அவன் மேலும் பல வாயில்கள் உள்ளே அடுக்கடுக்காக இருப்பதாகவும் அத்தனை வாயில்களையும் அவன் கடந்து செல்ல அவனுக்கு எதிர்காலத்திலேயே சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் வாயில்காப்போன் சொல்கிறான். அவன் சாகும் தருணம் வரை காத்திருக்கிறான். அந்த வாயில்கள் அவனுக்கு மாத்திரமேயான பிரத்யேகமான வாயில்கள் என்று மட்டுமே அவனால் அறிய முடிகிறது ஆனால் ஒரு வாயில் கூட அவனுக்காகத் திறப்பதில்லை. 

தன் தந்தையின் முன்னாலும் திறக்காத வாயில்களின் முன்னால் நிற்பவராகத்தான் காஃப்காவும் இருந்தாரோ? 

எப்படியிருப்பினும் காஃப்கா தந்தையர் தினம் கொண்டாடியிருக்க வாய்ப்புகள் குறைவு.   

  

  


No comments: