Saturday, June 7, 2014

மீண்டும் கொரியாவுக்கு

ஜியோஞ்ஜோ மாவட்டத்திலுள்ள புங்னாமுன் கோட்டையின் நுழைவாயில்



ஜூன் மாத இறுதியில் ஒரு வார காலம் தென்கொரியாவுக்கு மீண்டும் செல்கிறேன். போன வருடம் நவம்பர் மாதம் தென் கொரியாவில் உள்ள ஜிண்டோ நகரில் நடந்த கருத்தரங்கு ஒன்றிற்கு பங்கேற்க சென்றபோது உண்டான மன உத்வேகத்தில் 'அழாதே, மச்சக்கன்னி' நாவலை எழுத ஆரம்பித்தேன். இப்பொழுது அந்த நாவல் முடியும் தறுவாயில் மீண்டும் கொரியாவுக்கு செல்வதற்கான வாய்ப்பு தற்செயலாக கைகூடி வந்துள்ளது. யுனெஸ்கோவின் கொரிய கிளை நடத்தும் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள அழைப்பு வந்துள்ளது. அந்த கருத்தரங்கில் பாரம்பரியக் கலைகளை பாதுகாப்பதற்கு ஆசிய பசிஃபிக் நாடுகள் நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்கள் என்னென்னவாக இருக்கவேண்டும் என்பது குறித்து கட்டுரை வாசிக்கிறேன். ஜூன் மாத இறுதியில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கு ஜியோஞ்ஜோ என்ற நகரில் நடைபெறுகிறது. போருக்கு பிந்தைய கொரிய சமூகம் தன்னை எப்படி மீண்டும் வலுவாக புனரமைத்துக்கொண்டது என்பது 'அழாதே மச்சக்கன்னி' நாவலின் பின்புலம். கீழைத்தேய தேசிய புனரமைப்பு சிந்தனைகளை அல்லது அவை நோக்கிய விழுமியங்களை கலை விழுமியங்களாக நாவலுக்குள் கொண்டுவரமுடியுமா என்ற ஆராய்ச்சியில் கொரிய புனரமைப்பு திட்டங்களைப் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தேன். ஜியோஞ்ஜோ மாவட்டத்திலுள்ள புங்னாமுன் கோட்டையும் அதன் நுழைவாயிலும்  என் ஆராய்ச்சியின்போது புனரமைக்கப்பட்டவைகளுக்கு எடுத்துக்காட்டுகளாக மீண்டும் மீண்டும் தட்டுப்பட்டுக்கொண்டேயிருந்தன.  புகைப்படங்களாகவும், வீடியோ படங்களாகவும், புத்தக விவரிப்புகளாகவும் மட்டுமே நாவலுக்காக சேகரித்து வைத்திருந்தவற்றை நேரில் போய் பார்க்கும் வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஜியோஞ்ஜோ நகரம் கொரிய சைவ உணவு வகைக்களுக்காவும் மிகவும் பிரசித்தி பெற்றது என்பது நான் கூடுதலாக அறிந்துகொண்டது. கற்பனையின் விரிவுகள் நிஜத்தில் பொருந்திப் போகின்றனவா என்று அறிய ஒரு வாய்ப்பு. 

No comments: