Thursday, April 25, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-14

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-14

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொல்லியது

—-

இயற்றியவர்: ஒளவையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 15

திணை:  பாலை

————-

பறைபடப் பணில மார்ப்ப விறைகொள்பு

தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய

நாலூர்க் கோசர் நன்மொழி போல

வாயா கின்றே தோழி யாய்கழற்

சேயிலை வெள்வேல் விடலையொடு

தொகுவளை முன்கை மடந்தை நட்பே.

———- 

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

அழகிய வீரக்கழலையும், செம்மையாகிய இலையையிடைய வெள்ளிய வேலையும்கொண்ட தலைவனோடு பலவாகத்தொக்க வளைகளைப் பூண்ட முன்கைகளையுடைய நின் மகள், வெள்ளிய வேலைக் கொண்ட தலைவனோடு செய்த நட்பானது, மிகப்பழைய ஆலமரத்தடியின்கண் உள்ள  பொதுவிடத்தில் தங்குதலைக் கொண்டு தோன்றிய, நான்கு ஊர்களிலுள்ள கோசரது நன்மையையுடைய மொழி உண்மையானவதைப் போல, முரசு முழங்கவும், சங்கு ஒலிக்கவும் மணம் செய்தததால் உண்மை ஆகியது.

———

வாசிப்பு

——- 

செவிப்புல குறிப்பான்களும் (auditory signs) தலைவியின் சமூக நிலை மாற்றமும்

————

‘பறைபட’ என்ற ஆரம்பச் சொற்களுக்கு உ.வே.சா. பறையும் சங்கும் மங்கல நாளில் முழங்குவன என உரை எழுதுகிறார். பொ. வே. சோமசுந்தரனார் மணப் பறைகள் ஆரவாரிப்பவும் என அந்த மங்கல நிகழ்ச்சி என்ன என்று சொல்கிறார்.  மணவிழாவின் கொண்டாட்ட சப்தங்களை செவிப்புல குறிப்பான்கள் என (auditory signs)  அழைக்கலாம்; இவற்றைக் கவனப்படுத்தி ஆராயும் அறிஞர்கள் ஓசைகளும் இசையும் சமூக யதார்த்தத்தை க் கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்று எழுதுகிறார்கள். (பார்க்க: Drobnick, Jim, ed. The Smell Culture Reader. Oxford: Berg, 2006.). மங்கல இசைக்கு அடுத்தபடியாக கவிதையில் சுட்டப்படும் அணிகலணான முன்கை வளையல் அவள் மணமகளாக சமூக நிலையில் உயர்ந்த மாற்றத்தைப் பெற்றுவிட்டாள் என்பதைக் குறிக்கிறது. வான் கென்னப் (Van Gennep) எனும் ஃபெரெஞ்சு மானிடவியலாளர் எழுதிய Rites of passage  எனும் நூல் மணவினை போன்ற வாழக்கைவட்ட சடங்குகள் ஒருவரின் வாழ்க்கையில் சமூக அந்தஸ்த்தின் நிலை மாற்றத்தை எப்படிக் கொண்டுவருகின்றன என்பதை விளக்குகிறது. உடன்போக்கில் முன்பு தலைவனோடு ‘தொன் மூது ஆலத்து’ (தொன்மையான ஆலமரத்தடியில்) இருந்த தலைவி, அதாவது முன்பு சமூக ஒப்புக்கொள்ளாத உடன்போக்கு உறவில் இருந்த தலைவி இப்போது மண உறவில் நுழைந்து சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டாள் எனக் கவிதை சொல்கிறது. சமூக அங்கீகாரத்தை பெறுவதற்கு முன்பான ஆலமரத்தடி நிலையை வான் கென்னப் liminal stage - சமூக இடைநிலை - என வகைப்படுத்துவார். கவிதையில் வெள்ளிய வேல்தாங்கிய தலைவன் என்றது தலைவி தலைவனோடு சென்றது அபாயங்கள் நிறைந்தது என்பதைக்குறிப்பால் உணர்த்தியது.

——-

காதல் சமூகத்தில் வேர்கொண்டது

——

உடன்போக்கின் பின் இருவரும் மணம் புரிந்து கொள்வதானால் மடந்தையின் நட்பானது உலகறிய உண்மையாகும் என செவிலித்தாய் தலைவியின் தாயிடம் சொல்வதாய் இக்கவிதை அமைந்துள்ளது.  பலர் கூடியிருத்தற்கேற்ற கிளைபரப்பும் நிழலுடய ஆலமரத்தினடியும், ‘நாலூர்க் கோசர் நன்மொழி போல’ என்றதும் சமூகம் என்பதன் விளக்கங்கள் ஆயின. இந்தக் கவிதை  தனிப்பட்ட இணையரின் பிணைப்பை சமூக வழக்கத்தின் வலு, அதன்  நீண்ட ஆயுளுடன் இணைக்கிறது;  இது அவர்களின் தனிப்பட்ட அனுபவத்தை மீறிய சொந்தம், ஆதரவு ஆகியவை தரும் பாதுக்காப்பு உணர்வையும் குறிக்கிறது.

———-

பகிர்ந்துகொண்ட நம்பிக்கை

——

தலைவிக்கும் தலைவனுக்கும்  திருமணம் நிகழும்போது உடன்போக்கு சென்ற மகளின் நிலை சமூக அங்கீகாரத்தைப் பெற்றுவிடும் என செவிலி தலைவியின் தாய்க்கு ஆறுதல் கூறுவதாக இந்தக் கவிதை அமைந்துள்ளது. அடுத்த தலைமுறையைப் பற்றிக் கவலைப்ப்டாத தாய்மார்கள் எந்தக் காலத்திலாவது இருந்திருக்கிறார்களா, என்ன? இக்கவிதையை ஒளவையார் எழுதியிருப்பது கூடுதல் சிறப்பு. உடன்போகிய மகளை செவிலியோ, தாயோ கண்டிக்கவில்லை என்பதையும் செவிலி மகளை ‘வளை முன் கை மடந்தை’ என அழைப்பதை அன்பின் விளி என்றும் எடுத்துக்கொண்டால் செவிலியும் தாயும் மகளின் உடன்போக்கு திருமணம் மூலம் சமூக அங்கீகாரம் பெற வேண்டும் என்று விழைகிறார்களே தவிர மகள் செய்தது தவறென நினைக்கவில்லை என்றும் வாசிக்கலாம். 

——-